எழிலன் தொடர்பான ஆட்கொணர்வு மனு குறித்து விசாரணைக்கு உத்தரவு

எழிலன்
Image caption எழிலன்

விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருக்கின்றது.

இறுதி யுத்தத்தின்போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி எழிலன் உட்பட பெரும் எண்ணிக்கையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அராசங்கத்தின் பாதுகாப்பு உறுதி மொழியை ஏற்று இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தாங்கள் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை இராணுவத்தினரிடம் கையளித்ததாகவும், இராணுவத்தினர் அவர்களைப் பொறுப்பேற்று, தமது பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றதாகவும்,அவர்கள் இன்னமும் திரும்பவில்லை என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

நான்கு வருடங்களாகிவிட்ட போதிலும், அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை இராணுவமோ அல்லது அரசாங்கமோ தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும். எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை விசாரணை செய்வதுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி, எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பில் ஆட் கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சரணடையவில்லை

இந்த மனுக்கள் தொடர்பாக இராணுவ தரப்பில் கால தாமதத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தங்களிடம் எவரும் சரணடையவில்லை என்றும், தாங்கள் யாரையும் எவரிடமிருந்தும் பொறுப்பேற்கவில்லை என்றும் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, தங்களுடைய ஆம்கொணர்வு மனுக்களில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் மேல் நீதிமன்றத்தில் கோரியதையடுத்து, இது தொடர்பான நீதவான் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி ஆரம்பித்து கூடிய விரைவில் நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது,

இதேவேளை, மற்றுமொரு தொகுதியாகிய மேலும் 7 பேர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான இராணுவ தரப்பு கருத்துக்களை வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, வவுனியா மேல் நீதிமன்றம் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்த்தரப்பினராகிய இராணுவ தரப்பினருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.