ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'பௌத்தக் கொடி இலங்கையின் யதார்த்தத்தையே பிரதிபலிக்கிறது'

இலங்கையில் புத்த மதத்துக்கு முதன்மை இடம் கொடுத்த 1972 அரசியல் சட்டத்தை அடுத்து, பௌத்தம் தான் முன்னிலைப்படுத்தப்பட்ட மதம் என்ற உணர்வு மக்களிடையேயும் ஊன்றி வந்திருக்கிறது, இந்த நிலையில் சுதந்திரச் சதுக்கத்தில் புத்த மதக்கொடி பறக்கவிடப்பட்டிருப்பது என்பது இந்த உண்மையின் புற நிலையான வெளிப்பாடே தவிர , இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறுகிறார் மானுடவியல் பேராசிரியரும், பகுப்பாய்வாளருமான யுவி தங்கராஜா.

யதார்த்தமான நிலையை வைத்துப் பார்த்தால் இலங்கையில் பௌத்தத்திற்குத்தான் முதலிடம் தரப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சுதந்திரச் சதுக்கம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஒரு மதத்தினர் மட்டும் சொந்தம் கொண்டாடக்கூடிய கொடி பறக்கவிடப்பட்டிருப்பதை, உள்ளூர்வாசிகள் கூட இது நாள் வரை உணரவில்லை, இதன் குறியீட்டளவிலான முக்கியத்துவம் வெளிநாட்டிலிருந்து வந்தவருக்குத் தெரிகிறது என்றார் அவர். மக்களுக்கு இது குறித்த பிரக்ஞை இல்லை என்பது கவனிக்கவேண்டிய விஷயம் என்றார் அவர். அந்த வகையில் உள்ளூர்மக்கள் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டார்களா என்ற கேள்விகூட எழுகிறது என்றார் யுவி.

சிங்கள மக்களில் முற்போக்கானவர்கள் மத்தியில் இது போன்று சிறுபான்மை மக்களை வருத்தும் அல்லது அவர்களை பாரபட்சமாக நட்த்தும் நடவடிக்கைகள் தவிர்க்கப்படவேண்டும் என்ற உணர்வு இருந்தாலும், அரசு ,கடும்போக்காளர்களை திருப்திப்படுத்தும் வண்ணமே செயல்படுகிறது என்றும் யுவி கூறினார்.

தவறு இல்லை என்கிறார் அமைச்சர் வாசுதேவ நானயக்கார

இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நானயக்கார, இது சம்புத்த ஜயந்தி காலம். எனவே இந்தக் காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் புத்த மதக்கொடியைப் பறக்கவிடுவது அசாதாரணமானது இல்லை, இதில் யாரும் கவலை தெரிவிக்கவும் இல்லை என்றார்.