இலங்கை வற்புறுத்தலால் 3 ஆவணப்படங்கள் விழாவில் இருந்து நீக்கம்

  • 3 அக்டோபர் 2013
நோ பயர் சோன் வீடியோ
Image caption நோ பயர் சோன் வீடியோ

நேபாளின் தலைநகர் காத்மண்டுவில் நடந்துவரும் தெற்காசிய ஆவணப்படக்கண்காட்சியில் திரையிடப்படவிருந்த இலங்கையைப் பற்றிய 3 குறும்படங்கள் கண்காட்சியிலிருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டுள்ளன.

கண்ணன் அருணாச்சலத்தின் புரோக்கன், தி ஸ்டோரி ஆப் ஒன் ஆகிய இரண்டு படங்களும், இலங்கை படையினர் போர் குற்றங்களைச் செய்த்தாக குற்றம் சாட்டும் கல்லம் மெக்ரேவின் நோ பயர் சோனும் விழாவில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

இலங்கை அரசின் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விழாவின் ஏற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். "எங்களுக்குத் தெரிந்தவரை 3 ஆவணப் படங்களைத் திரையிடக் கூடாது என்று இலங்கை அரசு, நேபாள அரசுக்கு தனது தூதரகம் மூலம் அழுத்தம் கொடுத்துள்ளது. இதையடுத்து நேபாள அரசு இந்த கடித்ததை அனுப்பியுள்ளது," என்றார் பிலிம் சவுத் எசியாவின் தலைவர் கனக் மணி தீக்ஷித்.

திரையரங்குகளில் இந்தப் படங்களை திரையிட முடியாவிட்டாலும், குறிப்பிட்ட சிலருக்கு இந்தப் படம் தனியாக போட்டுக் காட்டப்படும். இந்தப் படங்கள், சிறந்த ஆவணப் படங்களுக்கான போட்டியில் தொடர்ந்து இருக்கும் என்றும் தெற்காசிய ஆவணப்பட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.