'மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சு பறிபோகாது': தொண்டமான்

Image caption ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்க் கல்வியமைச்சு தக்கவைக்கப்பட்டுள்ளதாக தொண்டமான் கூறுகிறார் (கோப்புப் படம்: இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜுடன்)

மத்திய மாகாணசபையில் இதுவரைகாலம் இருந்துவந்த தமிழ்க் கல்வியமைச்சு ஒழிக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

மத்திய மாகாணத்துக்கான 4 அமைச்சர்களில் ஒருவர் வழமையைப் போல தமிழ்ப் பிரதிநிதியாகவே இருப்பார் என்றும் அந்த அமைச்சரின் கீழ் தொடர்ந்தும் தமிழ்க் கல்வியமைச்சும் தக்கவைக்கப்பட்டிருக்கும் என்றும் அரச உயர்மட்டத்திலிருந்து உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆனால், அண்மையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட மத்திய மாகாண முதலமைச்சரே மாகாணத்தின் முழுமையான கல்வியமைச்சையும் பொறுப்பேற்றுள்ளதாகவும் தமிழ்ப் பிரதிநிதிக்கு ஒதுக்கப்படும் அமைச்சுக்களில் தமிழ்க் கல்வியமைச்சு பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரும் மத்திய மாகாணத்தின் முன்னாள் கல்வியமைச்சருமான வீ. இராதாகிருஷ்ணன் தமிழோசையிடம் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

1988-இல் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்ட போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக இருந்த மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் முயற்சியினால் மிகவும் பின்தங்கியிருந்த மலையகக் கல்வி நிலையைக் கருத்தில்கொண்டு, மத்திய மாகாணத்தின் முழுமையான கல்வியமைச்சும் தமிழ்ப் பிரதிநிதியிடமே ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் வந்த அரசியல் மாற்றங்களில் விளைவாக, முழுமையான கல்வியமைச்சிலிருந்து தமிழ்க் கல்வி விவகாரம் மட்டும் பிரிக்கப்பட்டு தமிழ்ப் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இம்முறை நடந்துமுடிந்த மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 8 உறுப்பினர்கள் உட்பட மத்திய மாகாணசபைக்கு 14 தமிழ்ப் பிரதிகள் தேர்வாகியுள்ளனர்.

எனினும், தனியான தமிழ்க் கல்வியமைச்சுப் பொறுப்பினை ஒழித்துவிடுவதற்கான நடவடிக்கைகள் அரச மட்டத்தில் எடுக்கப்பட்டிருப்பதாக அரசியல் தலைவர்கள் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், இதுவரை காலமும் இருந்துவந்த தமிழ்க் கல்வியமைச்சுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அரச உயர்மட்டம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.