வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் நடராஜா காலமானார்

  • 6 அக்டோபர் 2013
Image caption மறைந்த வீரகேசரி பிரதம ஆசிரியர் செல்லையா நடராஜா

இலங்கையின் மிகச் சிறந்த தமிழ்ப் பத்திரிகையாளர்களின் ஒருவரும், பத்திரிகைத் துறை முன்னோடியும்,வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான செல்லையா நடராஜா அவர்கள் காலமானார்.

சுமார் 45 வருடங்கள் பத்திரிகையாளராகச் செயற்பட்ட அவர், தமிழ்ப் பத்திரிகைத் துறையின் பல முக்கியஸ்தர்களை பயிற்றுவித்தவராகவும் திகழ்ந்தார்.

பத்திரிகையின் பல மட்டங்களிலும் பணியாற்றிய இவரால் பயிற்றுவிக்கப்பட்ட பல செய்தியாளர்கள் உலகின் பல இடங்களிலும் இன்று பணியாற்றுகிறார்கள்.

இலங்கையின் இனக்கலவரக் காலம், பலவிதமான அரசியல் சிக்கல்கள் மற்றும் அவற்றைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர்க் காலகட்டம் ஆகியவற்றின்போது வீரகேசரி பத்திரிகையை தொடர்ச்சியாகச் செயற்படச் செய்ததில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

இலங்கைப் பத்திரிகைத் துறையின் ஒரு ஜாம்பவான் என்று இவரை வர்ணிக்கிறார்கொழும்பு தினக்குரல் பத்திரிகையின் செய்தி ஆசிரியரான கே. ஆர். பி. ஹரன்.

இதேவேளை, தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியர்களில் ஒருவரும், சிறுகதை மற்றும் கவிதை எழுத்தாளருமான பி. ரவிவர்மாவும் இதே தினத்தில் மரணமானார்.

இவர்களது மரணம் குறித்து இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தனது கவலையை வெளியிட்டுள்ளது.