'விக்னேஸ்வரன் காமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்க வேண்டும்'

  • 26 அக்டோபர் 2013
Image caption விக்னேஸ்வரன் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று கூட்டமைப்புக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

வடமாகாண சபையின் முதலாவது அமர்வு யாழ்ப்பாணம் கைதடியில் நடைபெற்றதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சித் தலைவர்களின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளியன்று மாலை நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டிருப்பதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாத போதிலும், மாநாட்டுக்கு வருகை தரவுள்ள பல நாடுகளின் பிரதிநிதிகளை மாநாட்டுக்கு வெளியில் சந்தித்து இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையொன்றும் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் கொலைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்று சர்வதேச நாடுகள் பலவும் வலியுறுயுத்தி வருகின்ற நிலையில், இங்கு நடைபெறுகின்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை தாம் புறக்கணிப்பதென தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.

இக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சித்தார்த்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விக்னேஸ்வரன் நிலைப்பாடு என்ன?

இதேவேளை, வடமாகாண சபைக்கான தேர்தலுக்கான பிரசாரங்கள் முடிவுற்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கியிருந்த சி.வி.விக்னேஸ்வரன் வாக்களிப்பு தினத்திற்கு முதல் நாளன்று, இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த விசேட செவ்வியொன்றில் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பதில் அர்த்தமில்லை என்று தெரிவித்திருந்தார்.

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்காமல், துணிவுடன் அதில் கலந்து கொண்டு நேரடியாகப் பல நாடுகளுக்கும் இலங்கை அரசு என்ன செய்ததென்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

வடமாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டி, அவர் முதலமைச்சராகப் பதவியேற்று சபையின் முதலாவது அமர்வும் முடிந்துள்ள நிலையில், பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார் என்பது தெரியவில்லை. அதுபற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.