ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்க சர்வதேசத்திடம் செல்வோம்'

  • 30 நவம்பர் 2013
Image caption தமது மக்களின் வழிபாட்டிடங்களும் மத உரிமைகளும் பறிக்கப்படுவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் கூறுகிறது

இலங்கையில் இந்துக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டுவருவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் கூறியுள்ளது.

இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதும் இந்துக்களின் வழிபாட்டிடங்களில் வழிபாடுகள் நடத்த முடியாத அளவுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடந்துவருவதாகவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் மூத்த சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள இந்து ஆலயங்களை மூடி வைத்திருக்காது பூஜைகள் நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை என்றும் கந்தையா நீலகண்டன் கூறினார்.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக சர்வதேச சமூகத்திடம் தங்களின் பிரச்சனைகளை கொண்டு செல்ல நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கீரிமலை உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த மூன்று இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், அதுபற்றி சென்றுபார்க்க முயன்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை உள்ளே செல்ல அனுமதிக்காது இராணுவத்தினர் திருப்பியனுப்பி விட்டதாகவும் கந்தையா நீலகண்டன் கூறினார்.

'முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால்..'

Image caption கந்தையா நீலகண்டன்

வடக்கு மாகாண முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலை எப்படி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சுதந்திர கால அரசியல் தலைவர்களில் ஒருவரான சேர். பொன் இராமநாதன் இன்று இருந்திருந்தால் தமது மக்களின் நிலைகண்டு 'கண்ணீர் விட்டு அழுதிருப்பார்' என்றும் இந்து மாமன்றத்தின் தலைவர் கூறினார்.

இன்று சனிக்கிழமை சேர். பொன் இராமநாதன் தினம் அனுட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இராணுவம் மறுப்பு

இதேவேளை, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் குற்றச்சாட்டுக்களை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

'யாழ்ப்பாணத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ மத வழிபாட்டுத் தலங்களை அழிக்கும் வேலையில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபட்டதில்லை. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவமும் பொய்யான செய்தியை அடிப்படையாகக் கொண்டு பரப்பட்டிருக்கிறது' என்றார் இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய.

'யாழ்ப்பாணத்தில் மக்களின் வாழ்விடங்களில் மத சுதந்திரத்துக்கு எந்தவிதமான தடைகளும் கிடையாது' என்ற இலங்கை இராணுவ பேச்சாளர், 'மக்கள் வசிக்காத அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள ஆலயங்களில் பூஜை வழிபாடு நடத்த வேண்டும் என்று கோருவது நியாயமில்லை' என்றும் தமிழோசையிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.