ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முற்றுகிறது மீனவர் பிரச்சினை; உண்ணாவிரதம் தொடர்கிறது

Image caption இலங்கையில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் சிலர்

இலங்கைத் தரப்பால் தாங்கள் எதிர்நோக்கும் இன்னல்களைக் கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

நாகபட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 64 கிராமத்து மக்களும் அங்குள்ள பஞ்சாயத்து அமைப்புகளும் இணைந்து இந்த வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போரட்டக் குழுவைச் சேர்ந்த மோகன் தாஸ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கையின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள தமது 70 படகுகள்,மற்றும் சிறையில் இருக்கும் சுமார் 200 மீனவர்கள் விடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மற்றும் தஞ்சைப் பகுதி மீனவர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முதல்வருடன் சந்திப்பு

Image caption இலங்கையில் நீதிமன்றத்துக்கு செல்லும் தமிழக மீனவர்கள்

தொடர் உண்ணாவிரதத்தில் சுமார் 3000 பேரும், ஆதரவு தெரிவிக்கும் வகையில் 10,000 பேரும் இதில் பங்குபெறுவதாக மோகன் தாஸ் கூறுகிறார்.

இந்தியா-இலங்கை இடையே மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் நடைபெற்ற பேச்சுவார்தைகள் தீர்வில்லாமல் இழுத்துக் கொண்டே செல்கிறன என்றும், இதற்கு முடிவு காண இந்திய அரசு போதிய முயற்சிகளை எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.

இதனிடையே இப்பிரச்சினை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் திங்கட்கிழமை(23.12.13) தமிழக முதல்வரை சந்திக்கவுள்ளதாகவும், அதன் பிறகே போராட்டம் குறித்த அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் மோகன் தாஸ் தெரிவித்தார்.

இதனிடையே இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, இந்திய அமைச்சர் ஷரத் பவாரை சந்திக்க புதுடில்லி செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.