மன்னார் மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் தொடங்கின

  • 28 டிசம்பர் 2013
மன்னார் மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் கோரியுள்ளார்

இலங்கையின் வடமேற்கே வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை அண்டிய மாந்தை சந்திக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில், சட்ட வைத்திய நிபுணர் டாக்டர் வைத்தியரத்ன தலைமையிலான சட்ட வைத்திய அதிகாரிகள், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை மாணவர்கள், உடற்கூறியல் நிபுணர், தொல்பொருளாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பொலிசாரின் உதவியோடு இந்தப் புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

முதற்கட்டமாக, மனித உடல் எச்சங்கள் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள நிலத்தைத் தோண்டும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றன.

எனினும் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படாத போதிலும், மேலும் மனித உடல் எச்சங்கள் அவ்விடத்தில் இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது.

புதைகுழியை தோண்டும் பணிகள் நாளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முன்னாள் அதியுயர் பாதுகாப்பு பிரதேசம்

முன்னர் அதியுயர் பாதுகாப்பு பிரதேசமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்திலேயே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியமராத காரணத்தினால் இநதப் பகுதி பற்றைக் காடாகக் காணப்படுகின்றது.

இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித உடல் எச்சங்களுக்கு உரியவர்கள் யார், அவர்கள் எப்படி- யாரால் இங்கு புதைக்கப்பட்டனர் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த மனிதப் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கையும் அதையொட்டிய விசாரணைகளும் நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கோரியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி குறித்து மேலும்