'சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் கடற்படை முகாமுக்குள் ஓடினார்'

  • 30 டிசம்பர் 2013
Image caption இலங்கை கடற்படையின் சீருடையில் முன்னர் நடமாடிய நபரே 4 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தந்தை குற்றஞ்சாட்டுகிறார்

இலங்கையில் திருகோணமலை மாவட்டம்- குச்சவெளி பிரதேசத்தில் 4 வயது பெண் சிறுமி, கடற்படைச் சிப்பாய் என சந்தேகிக்கபடும் நபரொருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ள போதிலும், குறித்த நபர் கடற்படை முகாமில் பணியாற்றும் சமையல்காரர் என்று இலங்கை காவல்துறை கூறுகிறது.

திரியாய் கடற்படை முகாமுக்கு அண்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் வீட்டிற்கு கறிவேப்பிலை தேவை எனக்கூறி வந்துள்ள இந்நபர், சிறுமியைத் தூக்கி மடியில் இருக்கச்செய்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இதனை அவதானித்த சிறுமியின் 12 வயது சகோதரி சத்தம்போட்டு தாயை வரவவழைக்க, அந்நபர் கடற்படை முகாமுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் குழந்தையின் தந்தை கூறுகின்றார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை ஒரு வருடமாக சீருடையிலும் சிவில் உடையிலும் தான் கண்டுள்ளதாக கூறும் குழந்தையின் தந்தை, சம்பவத்தின் போது சிவில் உடையில் தான் அவர் வந்ததாகவும் தெரிவிக்கின்றார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கடற்படைச் சிப்பாய் என குழந்தையின் தந்தை சந்தேகம் வெளியிட்டாலும், இலங்கை காவல்துறையின் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோகண அந்நபர் முகாமின் சமையல்காரன் என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக திருகோணமலை அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

மருத்துவப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அந்நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை கூறுகின்றது.

இந்தச் செய்தி குறித்து மேலும்