தலைமை நீதியரசர் ஷிராணி பதவிநீக்கம் தவறு என்ற தீர்ப்பு ரத்து

  • 21 பிப்ரவரி 2014
Image caption முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு சட்டத்தரணிகள் சமூகம் எதிர்ப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

இலங்கையின் முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கப்பட்ட நாடாளுமன்றத் தீர்மானம் சட்டத்துக்கு முரணானது என்று முன்னர் வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்துள்ளது.

குறித்த பதவிநீக்கத் தீர்மானம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், தலைமை நீதியரசரை பதவிநீக்குவதற்கான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

அதற்கான மனுவை முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இதன்போது, குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கைகளை ரத்துசெய்வதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகள் மூலம் நாட்டின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த மனுவொன்றை உச்சநீதிமன்ற நீதியரசர்கள் ஐந்து பேரடங்கிய குழு விசாரித்தது.

அதன்படி, ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் ரத்துசெய்தது.

நாடாளுமன்றத்துக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்கு ரிட் கட்டளைகளைப் பிறப்பிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று அரசு தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் ஸரூக் தெரிவித்தார்.

முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்டது சட்டத்துக்கு முரணானது என்று சர்வதேச அமைப்புகள் கூறிவந்தாலும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று இன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் உறுதியாகிவிட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் ஸரூக் கூறினார்.