ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிறுநீரக நோய்: 'விவசாய இரசாயன பாவனையை தடுக்க வேண்டும்'

படத்தின் காப்புரிமை ANNA MARIA BARRY JESTER
Image caption முன்னாள் யுத்தப் பிரதேசங்களுக்கும் சிறுநீரக நோய்கள் மெதுவாக நகர்ந்துவருகின்றன

இலங்கையில் சிறுநீரக நோயாளிகள் அதிகரிக்க காரணமாகியுள்ள விவசாய இரசாயன உர வகைகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் பாவனை தொடர்பான கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் சில பிரதேசங்களில் கடந்த 20 ஆண்டுகளாக மர்மமாக இருந்துவரும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மண்ணில் கலக்கும் விவசாய இரசாயனப் பொருட்களே காரணம் என்று தமது ஆய்வுகள் உறுதிசெய்துள்ளதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களினால் ஏற்படும் சிறுநீரக நோய்களிலும் வித்தியாசமான காரணங்களால் சிறுநீரக நோய்க்கு உள்ளான முதலாவது நோயாளி அனுராதபுரம் மாவட்டத்தில் 1993-ம் ஆண்டில் தான் கண்டறியப்பட்டுள்ளார்.

அதன்பின்னர், அடுத்த 10 ஆண்டுகளில் அந்தப் பகுதியின் சனத்தொகையில் 2.3 வீதமானோர் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டனர். கடந்த 10 பத்தாண்டுகளில் அந்த எண்ணிக்கை 15.5 வீதம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கம் கூறுகிறது.

இந்த நோயாளிகளின் அதிகரிப்புக்கு குடிநீர், உணவு, விவசாய இரசாயனம், மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் என்று பல்வேறு விடயங்கள் காரணங்களாக அமைந்திருக்குமா என்று மருத்துவர்கள் சங்கம் ஆராய்ந்து பார்த்துள்ளது.

'விவசாய இரசாயன பாவனையில் இலங்கை முதலிடம்'

'இப்படி ஆராய்ந்து பார்த்தபோது தான் எங்களுக்கு ஓர் உண்மை புலப்பட்டது. அதாவது உலகில் இலங்கையில் தான் விவசாய இரசாயனம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது' என்றார் இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய

'மற்ற நாடுகள் 10 -12 என்ற அலகுகளில் விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்தும்போது, இலங்கையில் 284 அலகுகள் என்ற அளவில் இரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவது இடத்தில் உள்ள வங்கதேசமோ 164 அலகுகள் என்ற அளவில் உள்ளது. அந்நாட்டைவிட இலங்கையின் பாவனை இரண்டு மடங்காக உள்ளது' என்றும் கூறினார் டாக்டர் அனுருத்த பாதெனிய.

Image caption வடமத்திய மாகாணத்தில் அதிகரித்துவரும் சிறுநீரக நோய்க்கான காரணம் கடந்த 20 ஆண்டுகளாக மர்மமாகவே இருந்து வந்தது

1960-70 களிலேயே இலங்கையில் விவசாய இரசாயன பாவனை தொடங்கியதாகவும் அதன்பின்னரே இலங்கையில் சிறுநீரக நோயாளிகளும் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அனுருத்த பாதெனிய கூறினார்.

கடந்த காலங்களில் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் விவசாய இரசாயனப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதில் இருந்த தடை காரணமாக அப்பகுதிகளில் குறைவாக இருந்த சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அங்கும் அதிகரித்துவருவதாக அதிகாரபூர்வமற்ற புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி மருத்துவர் சங்கத்தின் தலைவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

'ரஜரட்ட பகுதியில் முதலில் கண்டறியப்பட்டதால் 'ரஜரட்ட சிறுநீரக நோய்' என்றும் இதற்குப் பெயர் உள்ளது. இன்று இந்தநோய் அந்தப் பகுதியையும் தாண்டி, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற மற்ற தென்னிலங்கைப் பகுதிகளிலும் பெருமளவில் காணப்படுகிறது. இப்போது இந்த நோய் மெதுவாக வடக்கு நோக்கியும் நகர்ந்துவருகிறது' என்றார் மருத்துவர்.

அரசு சிறுநீரக நோயை 'கண்காணிக்கப்படும் நோயாக' அறிவிக்கவேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் நோய் பரவலைத் தடுப்பதற்கான மருத்துவ பிரிவு இதற்காக பணியாற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

விவசாயத்தில் இரசாயன பாவனை தொடர்பான கொள்கைத் திட்டங்களை மாற்றியமைக்கவும் 1960களின் முன்னர் இருந்த பாரம்பரிய உரங்களைக் கொண்ட விவசாய முறையை ஊக்குவிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை மருத்துவர்கள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

சிறுநீரக நோய் அதிகளவில் காணப்படும் பிரதேசங்களில் பெருமளவிலான பிள்ளைகள் அந்நோயினால் பெற்றோரை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.