32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

  • 4 மார்ச் 2014
32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
Image caption 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

இலங்கையின் வடகடலில் நெடுந்தீவுப் பகுதியில் திங்கள் இரவு 8 படகுகளில் அத்துமீறி வந்து, மீன்பிடித்ததாகச் சொல்லப்படுகின்ற 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்திருக்கின்றார்.

காங்கேசன்துறை துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட இவர்கள், யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தத் தகவலை அந்தத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி உறுதிப்படுத்தினார். இந்த மீனவர்களை நீதிமன்றத்தில் தாங்கள் ஆஜர் படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலப்பகுதியில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் இழுவைப் படகுகளுடன் வருவதை நிறுத்திக் கொள்வதாக இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தைகளில் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

ஆயினும் இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் சனி, ஞாயிறு தினங்களில் தலைமன்னார் மற்றும் மன்னார் கடற்பரப்புக்களில் பெரும் எண்ணிக்கையிலான இந்திய மீனவர்கள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்திருந்ததாக அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் முறையிட்டிருப்பதாக மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் ஜஸ்டின் சொய்ஸா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மூன்றாவது நாளாக வந்த 32 இந்திய மீனவர்கள் திங்களன்று நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

யாழ் மாவட்டத்தில் இதற்கு முன்னதாக பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி 7 படகுகளும், 29 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்ததாக யாழ் மாவட்ட மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.

திங்களன்று கைது செய்யப்பட்டவர்களைவிட 116 பேர் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.