ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெனீவா பிரேரணை: நாடுகள் விவாதம், இந்தியா மௌனம்

  • 8 மார்ச் 2014
Image copyright bbc
Image caption இலங்கை மீதான தீர்மானம் எந்தளவுக்கு பலமாக அல்லது பலவீனமாக அமையும் என்பது அதிகாரபூர்வமற்ற இந்த பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்மானிக்கப்படும்

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் முன்வரைவு பற்றி நாடுகளுக்கிடையில் அதிகாரபூர்வமற்ற வாதப்பிரதிவாதங்கள் நடந்துள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்கப் பிரேரணையை ஆதரிக்கும் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவான நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் கலந்துகொண்டிருந்தன.

தீர்மான முன்வரைவில் உள்ள வாசகப் பிரயோகங்கள் பற்றி இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் பேசியுள்ளனர். வரும் திங்கட்கிழமையும் இந்த வாதப்பிரதிவாதங்கள் நடக்கவுள்ளன.

கனடா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக வாதிட்டுள்ளன. பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, வெனிசூவேலா உள்ளிட்ட நாடுகள் இலங்கையை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளன.

Image copyright webtv.un.org
Image caption அமெரிக்கத் தீர்மானம் இலங்கையின் விவகாரத்தில் அத்துமீறி நுழையும் நவடிக்கை என்று இலங்கைப் பிரதிநிதி கூறியுள்ளார்

போர் முடிந்து நான்கரை ஆண்டுகளாகியும் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்று பிரேரணைக்கு ஆதரவான நாடுகள் கூறுகின்றன.

ஆனால், இலங்கைக்கு இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் வேறு உலகப் பிரச்சனைகள் உள்ளன என்றும் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வாதிட்டுள்ளன.

எனினும் உள்நாட்டு விசாரணை பொறிமுறை இலங்கையில் சாத்தியமாகாது என்றும் இலங்கையில் நீதித்துறையை ஜனாதிபதியே கட்டுப்படுத்தி வைத்துள்ளதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காத்துவருகிறது. வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பிரதிநிதி எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

இந்த சந்திப்பில் என்ன விடயங்கள் ஆராயப்பட்டன என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் அங்கு கலந்துகொண்ட ராஜ்குமார் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.