ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'இலங்கை குடி மக்களின் நலனுக்காகவே ஜெனீவா தீர்மானம்': மொரீஷியஸ்

Image copyright httpwww.unmultimedia.org
Image caption மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் அர்வின் பூலெல்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படுகின்ற இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டுவரும் இணை-அனுசரணை நாடுகளில் ஒன்றான மொரீஷியஸ் தொடர்பில் இலங்கை அதிருப்தி கொண்டுள்ளதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனனை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், மொன்டநேக்ரோ, மசெடோனியா ஆகிய நாடுகளுடன் மொரீஷியஸும் சேர்ந்து முன்மொழிந்து கொண்டுவருகின்ற தீர்மானம் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயல் என்றும் உள்நாட்டு விவகாரத்தில் அத்துமீறி நுழையும் நடவடிக்கை என்றும் ஜெனீவாவிலுள்ள ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவும் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட மொரீஷியஸ் வௌியுறவு அமைச்சர் அர்வின் பூலெல், 'மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல்கொடுக்கும் தங்கள் அரசின் நிலைப்பாடு' காரணமாகவே இலங்கை மீதான பிரேரணையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து கொண்டுவருவதாகக் கூறினார்.

'ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முடிவுகளின் படியும் காமன்வெல்த் மாநாட்டின் இறுதி முடிகளின் அடிப்படையிலுமே நாங்கள் இந்த பிரேரணைக்கு அனுசரணை வழங்குகிறோம்' என்றார் அர்வின் பூலெல்.

காமன்வெல்த் சாசனம் மற்றும் ஐநா மனித உரிமைகள் சாசனம் ஆகிய ஏற்பாடுகளுடன் முற்று முழுதாக இசைந்து நடக்க வேண்டும் என்ற தங்களின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

'மாற்றங்கள் ஏற்பட, கருத்தொற்றுமை ஏற்படும்'

Image copyright AFP
Image caption மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திரா ராம்கூலம் கனேடிய பிரதமருடன் சேர்ந்து இலங்கை காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்தார்

தற்போது விவாத மட்டத்தில் இருக்கும் இலங்கை மீதான தீர்மானத்தின் முன்வரைவில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் மனித உரிமை விழுமியங்களைப் பாதுகாத்தல் என்ற முக்கிய கடப்பாட்டில் கருத்தொற்றுமை ஏற்படும் என்றும் மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கையில் கடந்த நவம்பரில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை கனேடிய பிரதமருடன் சேர்ந்து மொரீஷியஸ் பிரதமரும் புறக்கணித்திருந்தார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அந்த மாநாட்டில் கலந்துகொள்வதை தவிர்த்திருந்தார்.

இலங்கையில் போர்க் காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிப்பதில் இலங்கை அக்கறை காட்டவில்லை என்றே மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அப்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையில் சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும் சில முக்கிய மனித உரிமை விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினாலேயே இலங்கை மீதான தீர்மானத்தை முன்னின்று கொண்டுவருவதாக மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் அர்வின் பூலெல் வில்லை தமிழோசையிடம் தெரிவித்தார்.

மொரீஷியஸ் எந்தவொரு நாட்டின் அழுத்தத்திற்கும் உள்ளாகி செயற்படவில்லை என்றும் மனித உரிமைகளுக்காக முன்னிற்பதே தமது நாட்டின் தலையாய கடமை என்றும் அர்வின் பூலெல் கூறினார்.

'இலங்கை மீதான தீர்மானம் ஒட்டுமொத்த இலங்கைப் பிரஜைகளுக்கும் பொதுவான- உலக மக்களுக்கே பொதுவான மனித உரிமை விழுமியங்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளதால்' அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.