மேலும் 74 இந்திய மீனவர் இலங்கைப் படையினரால் கைது

கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிலர்
Image caption கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிலர்

இலங்கையின் வடகடலில் இரண்டு இடங்களில் அத்துமீறி மீன்பிடித்த 74 இந்திய மீனவர்களை 18 படகுகளுடன் கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 53 பேர் 13 படகுகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றனர்.

மிஞ்சிய 21 பேரும் அவர்களுடைய 5 படகுகளும் தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டு, மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் வரும் 25 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்திய மீனவர்கள் 74 பேர் இவ்வாறு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் நடைபெறவிருந்த இம்மாதம் 13 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கோரியிருந்தார்.

அதற்கமைவாக அன்றைய தினம் 116 இந்திய மீனவர்கள் நல்லெண்ண வெளிப்பாடாக விடுதலை செய்யப்பட்டிருந்ததாக இலங்கைக் கடற்தொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

எனினும் இந்திய மீனவர்கள் தரப்பில் அரச அதிகாரிகள் வருகை தர முடியாமல் போனதாகத் தெரிவித்து, 13 ஆம் திகதி நடைபெறவிருந்த பேச்சுக்கள் பின்போடப்பட்டிருந்தன.

இதனையடுத்து, இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இப்போது இந்திய மீனவர்கள் மேலும் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.