வட இலங்கையில் இராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர்

  • 20 மார்ச் 2014
தேடப்படுபவரின் புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தது
Image caption தேடப்படுபவரின் புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தது

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் கிராமங்களில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இதனால் அங்கு மக்கள் பதற்றமும் அச்சமும் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் கிளிநொச்சி தர்மபுரம், புளியம்பொக்கணை பகுதியில் குற்றவாளி ஒருவரைத் தேடிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மீது, அந்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவரைக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்திருந்தார் என்று குற்றம் சுமத்தி பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற பெண்ணை, பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து, பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருக்கின்றார்கள்.

சுதந்திரபுரத்தில் தேடுதல்

இந்தச் சம்பவத்தையடுத்து, பரவலாக இராணுவத்தினர் சுற்றி வளைத்துத் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக முல்லைததீவு மவாட்டம் சுதந்திரபுரம், இருட்டுமடு ஆகிய கிராமங்கள் இன்று அதிகாலையிலேயே சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதுபற்றி அந்தக் கிராமவாசிகள் பலர் தனக்கு தொலைபேசி மூலமாக முறையிட்டிருந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன் கூறினார்.

Image caption இலங்கை இராணுவத்தினர்

''வீடுவீடாகச் சென்று தேடுதல் நடத்திய படையினர் வீட்டிலிருப்பவர்களின் விபரங்களைத் திரட்டியதுடன், இளைஞர்களையும் முன்னாள் போராளிகளையும் மைதானம் ஒன்றிற்குப் அழைத்துச் சென்றதால் உறவினர்கள் பெரும் அச்சமடைந்திருந்தனர். தங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடக்கப் போகின்றதோ என்று பதட்டமடைந்திருந்தனர். கொளுத்தும் வெய்யிலில் அந்த இளைஞர்கள் பல மணித்தியாலங்கள் வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்'' என்று மாகாண சபை உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியாவில் பூந்தோட்டம், அண்ணாநகர், மாறம்பைக்குளம், கருப்பனிச்சங்களம், காத்தார்சின்னக்குளம் போன்ற கிராமங்கள் இராணுவத்தினராலும், காற்சட்டை ரீசேட் உள்ளிட்ட சிவில் உடை அணிந்த படையினராலும் தேடுதல் நடவடிக்கைகள் நேற்றிரவும், இன்றும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். சுற்றி வளைப்புக்கு உள்ளாகிய பகுதிகளில் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்பட்டு விசாரணைகளின் பின்பே கடமைகளுக்காகச் சென்றவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.

இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் குறித்து, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய அவர்களைத் தொடர்பு கெண்டு கேட்டபோது அரசுக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இரண்டு தமிழ் இளைஞர்களைத் தாங்கள் தேடி வருவதாகவும் அதற்காகவே இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

அந்த இளைஞர்கள் பற்றி பொதுமக்கள் இராணுவத்தினருக்குத் தகவல்கள் வழங்கியுள்ளதுடன், புகைப்படங்களையும் கொடுத்து உதவியிருப்பதாகவும், சுதந்திரபுரம், இருட்டுமடு பகுதி பொதுமக்களிடம் இருந்து தாங்கள் தேடி வருகின்ற கோபி என்ற இளைஞன் அங்கு மறைந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்தே அந்தப் பகுதியில் இன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறினார்.