'சித்தாண்டி அகதி முகாமில் காணாமல் போனவர் குறித்த தகவலை பெற்றுத்தாருங்கள்'

ஆணைக்குழுவில் சாட்சியம் பதிவாகிறது
Image caption ஆணைக்குழுவில் சாட்சியம் பதிவாகிறது

1990 ஆம் சித்தாண்டி முருகன் ஆலய அகதி முகாமில் இராணுவச் சுற்றிவளைப்பின் காணாமல் போனவர்களின் உறவினர்கள், காணமல் போன உறவுகள் பற்றிய தகவல்களை பெற்றுத்தருமாறு தமது சாட்சியங்களில் போது ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

1990 ஆம் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இந்த முகாமில் தங்கியிருந்த 32 பேர் இராணுவத்தினால் அடையாளம் காணப்பட்டு விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்டு இதுவரை தகவல்கள் இல்லாத நிலையிலே ஆணைக்குழுவிடம் இந்த வேண்டுகோளை இவர்கள் முன் வைத்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2வது நாள் அமர்வு இன்று நடைபெற்றபோது இந்தக் கோரிக்கை அவர்களால் முன்வைக்கப்பட்டது.

கிரான் ரெஜி மண்டபத்தில் நடைபெற்ற 2வது நாள் அமர்வின் போது கிரான் மற்றும் வாகரை பிரதேசங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான சாட்சியங்களை ஆணைக்குழு பதிவு செய்ததோடு புதிய முறைப்பாடுகளையும் பெற்றுக்கொண்டது.

இன்றைய அமர்வின்போது விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பாகச் சாட்சியம் அளிப்பதற்கும், புதிதாக முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும் கணிசமானோர் அங்கு வருகை தந்திருந்தனர்.

அவர்களில் முன்னாள் புளொட் உறுப்பினரொருவரின் மனைவியும் சாட்சியமளித்திருந்தார்.

இவரது கணவன் உட்பட புளொட் உறுப்பினர்கள் 12 பேர் இலங்கை - இந்திய ஒப்பந்த காலத்தில் விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

தனது கணவன் சுட்டுக்கொல்லப்பட்ட போது, பின்னர் காணாமல் போயுள்ள தனது மகன் 40 நாள் கைக்குழந்தை என்றும் அவர் தனது சாட்சியத்தில் கூறியிருந்தார்.

இன்றைய அமர்வின் போது 50 க்கும் மேற்பட்ட சாட்சியங்களும் 300 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.