காணாமல்போனோர்: மட்டக்களப்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நிறைவு

சாட்சியமளிக்கிறார் மகேஸ்வரி ராஜநாதன்
Image caption சாட்சியமளிக்கிறார் மகேஸ்வரி ராஜநாதன்

24 வருடங்களாகியும் காணாமல்பொன தனது மூன்று பிள்ளைகள் தொடர்பாக எவ்வித தகவல்களும் இதுவரை இல்லை என மட்டக்களப்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த 9 பிள்ளைகளின் தாயாரான மகேஸ்வரி ராஜநாதன் தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு விஷேட அதிரடிப்படையினரால் தனது மூன்று பிள்ளைகளும் ஓரே நாளில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல்போனதாக அவர் கூறுகிறார்.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த அவர் காணாமல் போயுள்ள தனது மூன்று பிள்ளகளில் இருவர் 13 மற்றும் 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் என்று கண்ணீர் மல்க கூறினார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது அமர்வின் இறுதி நாள் விசாரணைகள் சனிக்கிழமையன்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது

அப்போதுபோது சாட்சியமளித்த பொத்துவிலை சேர்ந்த மகேஸ்வரி ராஜநாதன், "1990ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மீண்டும் மோதல் காரணமாக தானும் தனது பிள்ளைகளும் பொத்துவில் சிங்கள மகா வித்தியாலய முகாமில் தஞ்சம் பெற்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது." எனக் கூறினார்.

பொலிஸ் ஜீப்பில் வந்த விஷேட அதிரடி படை அதிகாரியொருவரால் தனது பிள்ளைகள் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Image caption இறுதி நாள் அமர்வில் ஐம்பதுக்கும் அதிகமானோர் சாட்சியமளித்துள்ளனர்.

மற்றுமோர் சாட்சியான திருப்பெருந்துறையை சேர்ந்த யேசுதாசன் எலிசபெத், தனது மகன் காணாமல்போன சம்பவத்துடன் தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சியொன்று தொடர்புபட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு 16 வயது பாடசாலை மாணவனான தனது மகன் வீட்டிலிருந்த வேளை இராணுவத்தினராலும் டெலோ அமைப்பினராலும் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல்போயுள்ளதாக தனது சாட்சியத்தில் கூறினார்

1990ஆம் ஆண்டு குருக்கள் மடத்தில் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள 150க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொடர்பாகவும் இரு முஸ்லிம்களின் சாட்சியங்களை ஆணைக்குழு பதிவு செய்தது.

இதனையடுத்து விசாரணைகள் முடிந்த பின்பு ஆணைக்குழு பிரதிநிதிகள் அந்த இடத்தையும் குறித்த முஸ்லிம்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கடலோரப் பகுதியையும் சென்று பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த மூன்று நாட்கள் அமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த 162 சாட்சிகளில், 132 பேர் சாட்சியமளித்ததாக ஆணைக்குழுவின் செயலாளரான எஸ். டப்ளியு குணதாச செய்தியாளர்களிடம் கூறினார்.

சாட்சிகளில் மூன்று பேர் இரகசியமாகவும் ஏனையோர் பகிரங்கமாகவும் சாட்சியங்களை அளித்தனர்.

பாதுகாப்பு தரப்பினர், விடுதலைப் புலிகள், கருணா குழுவினர், பிள்ளையான் குழுவினர், ஈ.பி.டி.பி மற்றும் புளொட் என பல்வேறு தரப்பினர் தொடர்பிலும் சாட்சியமளித்தவர்கள் சந்தேகங்களை தெரிவித்திருந்தார்கள்.

சாட்சியங்களை ஆராய்ந்து விசாரணைகள் மேற்கொண்டு அதன் பின்னர் தான் இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.