இந்திய மீனவர்கள் 24 பேர் வட- இலங்கையில் கைது

  • 27 மார்ச் 2014
Image caption எல்லை தாண்டி மீன்பிடித்தக் குற்றச்சாட்டில் முன்னர் கைதாகியிருந்த இந்திய மீனவர் குழுவொன்று ( கோப்பு படம்)

இலங்கையின் வட-கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 24 இந்திய மீனவர்கள் புதன்கிழமை இரவு கடற்டைபயினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இவர்களில் 4 படகுகளில் வந்த 19 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் தரை தட்டிய படகு ஒன்றில் இருந்த 5 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த 5 மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதிமன்றம் இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தத் தகவல்களை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் மன்னாரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் தங்களுக்கு உடனடியாக கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.