நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2 எம்பி)

புத்தளம் வாவியில் மின் கோபுரம்; மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

4 ஏப்ரல் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:48 ஜிஎம்டி

தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் கூறுகின்றனர்

இலங்கையில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து அனுராதபுரம் மாவட்டத்திற்கு மின்சாரத்தைக் கொண்டுசெல்வதற்கான மின்விநியோக கம்பிகளைத் தாங்கும் மின்கம்பங்களையும் மின் கோபுரத்தையும் புத்தளம் கடலேரி வாவியில் அமைக்ககூடாது என்று வலியுறுத்தி புத்தளம் நகரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி கடும் பொலிஸ் பாதுகாப்புடன் கலகமடக்கும் பொலிசாரும் புத்தளம் நகரில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர், புத்தளம் பெரிய பள்ளிவாசலின் முன்பாக இருந்து பேரணியாக சென்றவர்கள் நகரின் மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒருமணி நேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டிருந்தனர்.

புத்தளம் வாவியை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் சுமார் ஐயாயிரம் பேர் வரையான மீனவர்களின் நலன் கருதி, புத்தளம் வாவியை ஊடறுத்துச் செல்லும் மின்விநியோகத் திட்டத்தை நிறுத்துமாறு மீனவர்கள் கேட்டுக் கொண்டனர்.

வாவியில் அமையும் மின்கோபுரத்தினால் தமது மின்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஆபத்துக்கள் ஏற்படும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் பல தடவைகள் போராட்டம் நடத்தியும் அரசாங்கம் தமது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

ஆனால், மீனவர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளுக்கெல்லாம் செவி சாய்த்த பின்னரே புத்தளம் வாவியில் இந்த மின்கோபுரம் நிர்மானிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை கூறுகிறது.

'நீருக்கடியில் கான்கிறீட் அடித்தளம் ஒன்று இடப்படுகிறது. அதிலிருந்து பெரிய கோபுரம் ஒன்று கட்டப்படுகிறது. அந்தக் கோபுரத்தில்- நீர்மட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் உயர்த்தில் தான் மின் விநியோகக் கம்பிகள் பொருத்தப்படும்' என்றார் இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் செனஜித் தஸநாயக்க.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவோ, ஆபத்துக்கள் ஏற்படவோ வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.