ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வில்பத்து சரணாலயம்- முஸ்லிம் காணிகள்: அரசு மௌனமா?

படத்தின் காப்புரிமை govtwhip.gov.lk
Image caption 'தேசிய வனங்களை பாதுகாக்கும் கொள்கையில் உறுதி, குடியேற்ற உரிமையை மதிப்போம்'

இலங்கையில் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் பிரச்சனைகளை அரசாங்கத்துடன் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியும் என்று அரசாங்கக் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகின்றார்.

மன்னார் மாவட்டம் மறிச்சிக்கட்டி கிராமத்தில் முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதற்கு கடும்போக்கு பௌத்தவாத அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகி்ன்ற நிலையில், அதுபற்றி அரசின் நிலைப்பாடு என்ன என்ற பிபிசி தமிழோசை வினவியபோதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தப் பதிலைக் கூறினார்.

பாதுகாக்கப்பட்ட தேசிய வனப்பகுதியான வில்பத்து சரணாலயத்துக்குள் முஸ்லிம் மக்கள் குடியேற்றப்படுவதாக அரசாங்கத்திலுள்ள பௌத்த வாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய குற்றம் சாட்டி வருகின்றது.

ஆனால், அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் தலைவர்களோ முஸ்லிம்கள் தமது பூர்வீகக் காணிகளிலேயே குடியமர்த்தப்படுவதாகக் கூறிவருகின்றனர்.

வில்பத்து சரணாலயம் மற்றும் மறிச்சிக்கட்டி முஸ்லிம் கிராம மீள்குடியேற்றம் தொடர்பான தகவல்களை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த முயன்ற ஜாதிக பல சேனா என்ற சமூக நல்லுறவுக்கான அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பை முற்றுகையிட்டு பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்த அமைப்பு கடந்த புதனன்று குழப்பத்தில் ஈடுபட்டது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை பொது பல சேனாவின் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் வெளியிட்டதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசின் நிலைப்பாடு என்ன?

வில்பத்து விவகாரத்தில் அரசாங்கம் தனது அதிகாரபூர்வ நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் உள்ளமை இனங்களுக்கு இடையிலான உறவு மேலும் மோசமடையக் காரணமாகும் என்று நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.

இதுபற்றி தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு அரசாங்கக் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஸ் குணவர்தன பதிலளித்தார்.

கேள்வி: மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் விடயத்தில் அரசிடம் தெளிவான நிலைப்பாடு எதுவும் இருக்கிறதா?

Image caption வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் வட்டரெக்க விஜித்த தேரரை ஞானசார தேரர் அச்சுறுத்தியமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

அமைச்சர்: 'அரசிடம் திடமான கொள்கைத் திட்டம் இருக்கின்றபடியால் தான், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் லட்சக்கணக்கான மக்கள் தமது பிரதேசங்களில் மீளக்குடியமரக் கூடிய நிலைமையை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற முஸ்லிம், சிங்கள மக்கள் தங்களின் சொந்த இடங்களைத் தேடி வருகின்ற உரிமையையும் அரசாங்கம் தடுக்கவில்லை. அதேநேரம், ஏற்கனவே பிரகடனப்படுத்தப்படாத காடுகளாக அல்லா விட்டாலும், கடந்த 30 ஆண்டு யுத்த காலத்தில் காடுகளாக மாறிவிட்ட சில இடங்களும் உள்ளன. இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அந்தந்த திணைக்களங்களைக் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மன்னாரிலும் வில்பத்து சரணாலயப் பகுதிகளிலும் நாங்கள் இதே வழிமுறைகளையே கடைப்பிடிப்போம். அவ்வாறே, நாட்டின் தேசிய சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட வனங்கள் உள்ளிட்ட பகுதிகளைப் பாதுகாக்கும் தேசிய கொள்கைத் திட்டங்களை அரசு கைவிடப்போவதில்லை'.

சரி அமைச்சர் அவர்களே, பிரச்சனை ஏற்பட்டிருக்கின்ற மன்னார் மரிச்சிக்கட்டிப் பிரதேசம் வில்பத்து சரணாலயப் பகுதிக்கு உட்பட்டதா அல்லது மக்களின் வாழ்விடப் பிரதேசம் தானா என்பதில் அரசாங்கத்திற்கு தெளிவு இருக்கிறதா?

அமைச்சர்: 'வில்பத்து சரணாலயப் பகுதிகளுக்குள்ளும் பல்வேறு கிராமங்கள் உள்வாங்கப்பட்டு, சிறிய அளவில் மக்கள் குடியிருப்புகள் உருவாகியிருக்கின்றமை எங்களுக்குத் தெரிந்த விடயம். யால சரணாலயக் காடுகளிலும் அப்படியான கிராமங்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த மரிச்சிக்கட்டிப் பிரதேசப் பிரச்சனையை மிகப்பெரிய பூதாகரமான பிரச்சனையாக மாற்றிக்காட்டப் பார்ப்பது எங்களின் அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள் தான். இந்த சதிகார சக்திகள் எங்களிடம் பிரச்சனைகளை முன்வைத்தால் நியாயமான முறையில் பிரச்சனைகளின்றி தீர்வு வழங்க எங்களால் முடியும்'.

'எல்லா முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்தில்'

Image caption முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை அரசு தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன

கேள்வி: மரிச்சிக்கட்டி கிராம மக்களிடம் பூர்வ காணி உறுதி ஆவணங்கள் இருப்பதாக அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ள முஸ்லிம் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது சரணாலயப் பிரதேசம் என்று அரசின் இன்னொரு பங்காளியான ஜாதிக ஹெல உறுமய கூறுகிறது. பொது பல சேனா அமைப்பு இதனை ஒரு பிரச்சனையாக முன்வைத்து நடவடிக்கைளில் ஈடுபடுகிறது. இந்தப் பிரச்சனை இப்போது சமூகங்களுக்கு இடையிலான பிரச்சனையாக மாறும் அபாயத்தை அரசு தடுக்கவில்லை என்று தானே எதிரணி கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

அமைச்சர்: 'எங்களின் அரசாங்கத்துக்குள் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எல்லா கட்சிகளும் உள்ளன. அந்தக் கட்சிகள் தமது மக்களின் பிரச்சனைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கின்றன. அப்படியான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. அப்படியே, சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் என எல்லா குடிமக்களுக்காகவும் ஜனநாயக முறைப்படித் தான் நாங்கள் நடந்துவருகின்றோம். எந்த அமைப்பிடமிருந்து எதிர்ப்பு வந்தாலும் நியாயமாக நடந்துகொள்ளும் நிலைப்பாட்டில் தான் இந்த அரசு இருக்கிறது. பொதுவாக, வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் சிங்கள மக்களின் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. தமிழர்களின் மீள்குடியேற்றத்திற்கே அரசு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டுள்ளது'

வில்பத்து விவகாரம் உட்பட முஸ்லிம்களின் அண்மைக்காலப் பிரச்சனைகளை முன்வைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கக்கூடும் என்ற கோரிக்கைகளும் பத்திரிகைகளில் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.