மலையகத் தொழிலாளர்களின் வீடமைப்புக்கு நிதி இல்லையா?

படத்தின் காப்புரிமை AFP
Image caption வீடமைப்புத் திட்டத்தை அறிவித்த ஜனாதிபதி பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமை குறித்து சிவில் அமைப்புகள் சந்தேகம் எழுப்பியுள்ளன

இலங்கையில் கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் வாக்குறுதி அளிக்கப்பட்ட மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்துக்கு தேவையான நிதி தமக்குக் கிடைக்கவில்லை என்று நாட்டின் தேசிய வீடமைப்பு அதிகார சபை கடிதம் ஒன்றில் தெரியப்படுத்தியுள்ளதாக மலையக சிவில் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

மலையக மக்களுக்கு அடுக்குமாடி வீடுகளுக்குப் பதிலாக தனித்தனி வீடுகளை கட்டித்தருமாறு கோரி சிவில் அமைப்புகள் சில ஜனாதிபதிக்கு எழுதியிருந்த கடிதத்துக்கு வீடமைப்பு அதிகாரசபையிடமிருந்து அனுப்பப்பட்டுள்ள பதில் கடிதம் ஒன்றிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

மலையக மக்களின் வீடமைப்புக்குத் தேவையான நிதி அரச திறைசேரியில் (கருவூலம்) இருந்து தமக்குக் கிடைக்கவில்லை என்று தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கால்நடைகள் வள அபிவிருத்தி அமைச்சிலிருந்தும் இதற்கான நிதி கிடைக்கவில்லை என்றும் அங்கிருந்து நிதி கிடைத்தால் தோட்டப்புறங்களில் வீடமைப்புத் திட்டத்தைத் தொடங்கமுடியும் என்றும் அந்த அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் வீடமைப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆனால், வரவுசெலவுத்திட்டத்தில் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கு திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படாதுள்ளமை தொடர்பில் மலையக சிவில் அமைப்புகள் விசனம் தெரிவித்துள்ளன.

பட்ஜெட் அறிவிப்பு வெறும் தேர்தல் வாக்குறுதியா?

கால்நடைகள் வள அபிவிருத்தி அமைச்சு நாடு முழுமைக்குமான அமைச்சு என்ற நிலையில், மலையக மக்களுக்கான வீடமைப்புக்கு அந்த அமைச்சிலிருந்து நிதி எதிர்பார்ப்பது இனரீதியான பாரபட்சம் என்று மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சத்திவேல் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Image caption 'ஜனாதிபதியை நம்புகிறேன்': அமைச்சர் தொண்டமான்

ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் அடுக்குமாடி வீடுகளுக்குப் பதிலாக, மலையக மக்களுக்கு காணியுடன் கூடிய தனித்தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே, இதுபற்றி பிபிசி தமிழோசையிடம் பேசிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வீடமைப்புத் திட்டம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்று உறுதியளித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அண்மையில் ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்படி, விரைவில் திறைசேரியூடாக நிதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு 'நிலப்பகுதியுடன் கூடிய மாடி வீடு' கட்டிக்கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை அறிவித்த ஜனாதிபதி, வரவுசெலவுத்திட்டத்தில் அதற்கான நிதியை ஒதுக்கவில்லை என்ற விமர்சனங்களை எதிர்க்கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஏற்கனவே முன்வைத்திருந்தன.

இதற்கிடையே, இந்திய நிதியுதவியின் கீழ் தொழிலாளர்களுக்கான 4,000 வீடுகளை அமைக்கும் வேலைகளும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தொடங்கிவிடும் என்றும் ஆறுமுகன் தொண்டமான் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்