ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாதியர் போராட்டம்: அரசுக்கு ஒருவாரம் கால அவகாசம்

  • 5 மே 2014
Image caption நாடெங்கிலும் 600க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் செயற்பாடுகள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டன

இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவ தாதிமார், செவ்வாய்க்கிழமை முதல் ஒருவார காலத்திற்கு தமது போராட்டத்தை இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.

அரசாங்கம் ஒருவார காலத்திற்குள் தமக்கு தீர்வு வழங்காவிட்டால் மீண்டும் தீவிர போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுவான மருத்துவ தாதிமார் அனைவருக்கும் பிரசவ அறைப் பணிகளுக்கான பயிற்சிகளை மீளத்தொடங்குமாறு கோரியே தாதியர் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கின.

ஆனால், அனைவருக்கும் பிரசவ அறைப் பணிகளுக்கான பயிற்சிகளை அளிப்பதற்கு, தொழில்ரீதியான பிரசவ அறை தாதிமாரும் மருத்துவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

தாதியர் முன்னெடுத்துவந்த தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக நாடெங்கிலும் 600க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன. பல்லாயிரக் கணக்கான நோயாளிகள் அவதிப்பட்டனர்.

தாதியரின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் முன்னெடுப்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அரசாங்கத்திற்கு ஒருவார காலம் அவகாசம் வழங்கி போராட்டத்தை இடைநிறுத்தி வைப்பதாக தாதியர் தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.

'ஒருவார காலத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டும் எமது கோரிக்கைகளை முன்வைத்து தீவிரப் போராட்டம் தொடரும்' என்று அரசாங்க தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டி.எம். நஸ்ருடீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

'தாதியருக்கு எதிரான நிலைப்பாட்டில் மருத்துவர்கள்'

Image caption பொதுவான தாதியருக்கு பிரசவ அறைப் பயிற்சி வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மருத்துவர்கள் உள்ளனர்

தாதியருக்கு பிரசவ அறைப் பணிகளுக்கான பயிற்சிகளை மீளத் தொடங்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே உடன்பட்டிருந்த நிலையில், அரசாங்க மருத்துவர்களின் சங்கமே தாதியருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அரசாங்க தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் கூறுகின்றது.

இதேவேளை, பொதுவான மருத்துவமனைத் தாதியருக்கு பிரசவ அறையில் பணியாற்றுவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமைக்கு என்ன காரணம் என்று இலங்கை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் பிபிசி தமிழோசை வினவியது.

'இலங்கைச் சட்டப்படி மருத்துவர்களும் தொழில் ரீதியான- பிரசவ அறைத் தாதிமாருக்கும் (குடும்ப நல உத்தியோகத்தர்கள்) மட்டுமே அதிகாரம் இருக்கின்றது' என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான மருத்துவர் ஏ. லதாஹரன் தெரிவித்தார்.

பிரசவ அறைகளில் நடக்கும் விடயங்களுக்கு சட்ட ரீதியாகவும் தார்மீக அடிப்படையிலும் மருத்துவர்களே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரசவ அறையில், அதற்காக தனியான நியமனம் பெற்றிருக்கின்ற குடும்ப நல உத்தியோகத்தர்களே பணியாற்ற முடியும் என்று மருத்துவர்கள் வாதிடுவதை பொதுவான தாதியருக்கு எதிரான நிலைப்பாடாக அர்த்தப்படுத்த முடியாது என்றும் மருத்துவர் லதாஹரன் கூறினார்.