இலங்கை மீதான ஐ நா விசாரணை: வல்லுநர்கள் பெயர்கள் அறிவிப்பு

  • 25 ஜூன் 2014
Image copyright un.org
Image caption மார்ட்டி அத்திசாரி

இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கவுள்ள மூன்று வல்லுநர்களின் பெயர்களை ஐ நா அறிவித்துள்ளது.

சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், ஃபின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமான மார்ட்டி அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோரே அந்த மூன்று வல்லுநர்கள்.

Image copyright gov.nz
Image caption சில்வியா கார்ட்ரைட்

இந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதன் ஆணையர் நவி பிள்ளை இந்த அறிவிப்பை இன்று, புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.

இந்த மூவரும், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி சில ஆண்டுகளில் இடம் பெற்றதாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவுள்ள ஐ நா மனித உரிமை குழுவுக்கு, ஆலோசனை வழங்கவும், ஒத்துழைப்பு அளிக்கவும் உடன்பட்டுள்ளனர் என்று ஐ நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.

Image copyright BBC World Service
Image caption அஸ்மா ஜெஹாங்கீர்

ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்தும் என்று ஏற்கெனவே ஐ நா அறிவித்துள்ளது.

இலங்கை அரசு மற்றும் மக்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும், தடைகளை மீறி இந்த விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் இன்று வெளியிடப்பட்டுள்ள ஐ நா மனித உரிமைகள் ஆணைய செய்திக் குறிப்பு கூறுகிறது.