முல்லைத்தீவில் காணாமல் போனோர் குறித்து விசாரணை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முல்லைத்தீவில் காணாமல் போனோர் குறித்து விசாரணை - காணொளி

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தனது நான்கு நாள் விசாரணைகளை சனியன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்துள்ளது.

மொத்தமாக 230 பேர் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவினர் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இரண்டு தினங்களும், முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இரண்டு தினங்களும் விசாரணைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 60 பேரிடம் சாட்சியங்கள் பதியப்படும் என்றும் சனியன்று இவர்களில் 20 பேர் விசாரணைக்கு சமூகமளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைவிட 150க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளிப்பதற்காக வருகை தந்திருந்தனர். இவர்களைப் பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு வேறொரு தினத்தில் விசாரணைக்கு அழைப்பு அனுப்பப்படும் என்றும் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு.குணதாச பிபிசியிடம் கூறினார்.

விடுதலைப்புலிகளினால் ஆட்சேர்ப்பில் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருப்பவர்கள், இறுதிச் சண்டைகளின் பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போயிருப்பவர்கள் போன்றவர்கள் குறித்து சாட்சியங்கள் பதியப்படும்.

தனது உறவினர் காணாமல் போனதன் பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்டபோது, காணப்பட்டதாகவும், ஆயினும் அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல் தெரியவரவில்லை என்றும் இங்கு சாட்சியமளித்த ஒருவர் கூறியுள்ளார்.

இதேவேளை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சிவபாதம் குகநேசன் சாட்சியமளிக்கையில் தனது சகோதரி விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்திருந்ததன் பின்னர் காயமடைந்த நிலையில் இராணுவத்தினரால் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவரை திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பகுதியில் கண்ட ஒருவர் அதுபற்றி தகவல் கூறியதாகவும், மற்றுமொருவர் கடந்த வருடம் தெரிவித்த தகவலின்படி, தனது சகோதரி சவூதியில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வருவதாக அவருடன் பணியாற்றுகின்ற மற்றுமொரு பெண்ணின் மூலம் தகவல் அறிந்ததாகவும், எனவே அவரைத் தேடித்தருவதற்கு ஆணைக்குழுவினர் உதவ வேண்டும் என்றும் தனது சாட்சியத்தின்போது கேட்டுக்கொண்டார்.

இந்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை குறித்த சிறிய காணொளி.