ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ஆளுநர் சந்திரசிறி நியமனம் ஜனாதிபதிக்கே இழுக்கு': விக்னேஸ்வரன்

படத்தின் காப்புரிமை np.gov.lk
Image caption 'சந்திரசிறியின் பதவிக் காலத்துக்குப் பின்னர் சிவில் பின்புலம் கொண்டவரை ஆளுநராக நியமிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்'

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் ஆளுனராக மீண்டும் முன்னாள் இராணுவ அதிகாரி ஜீ.ஏ. சந்திரசிறியை நியமித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனநாயக நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் கூறியுள்ளார்.

வடக்கு மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி முன்னிலையில் தாம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது, சிவில் பின்புலம் கொண்ட ஆளுநர் ஒருவரை நியமிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்ததாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஆனால் தற்போது அந்த உறுதிமொழியை மீறியதன் மூலம் ஜனாதிபதி தனது பதவிக்கு இழுக்கை ஏற்படுத்தியிருப்பதாகவும் முதலமைச்சர் தமிழோசையிடம் கூறினார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, முழு நாட்டையுமே தமது அதிகாரத்தின் பிடியில் வைத்திருக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துடன் ஜனாதிபதி செயற்பட்டு வருவதையே வடமாகாண ஆளுனரின் மீள் நியனம் காட்டுவதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

'அதிகாரத்தை பகிரவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் (ஜனாதிபதியிடம்) இருப்பதாக நான் காணவில்லை' என்றார் விக்னேஸ்வரன்.

மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள மகிந்த ராஜபக்ஷ, வடக்கு மாகாணத்தில் தனது தேர்தல் தேவைகளுக்காகவே ஆளுநர் சந்திரசிறியை தொடர்ந்தும் வைத்திருக்க விரும்புவதாகவும் முதலமைச்சர் தமிழோசையிடம் தெரிவித்தார்.