நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.8 எம்பி)

'ஐநா பிரதிநிதியும் எம்மை புறக்கணித்து விட்டார்': விக்னேஸ்வரன்

19 ஜூலை 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 18:29 ஜிஎம்டி

முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கையில் உள்ள ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி, போரில் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்கள் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றில் வட மாகாணசபையை புறக்கணித்து செயற்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக வழியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாணசபையின் செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் அரசாங்க தரப்பினர் முடக்கி வருகின்ற சூழ்நிலையில், ஐநா பிரதிநிதியும் தம்மை புறக்கணித்திருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் பொன்விழாவையொட்டி சனிக்கிழமை இடம்பெற்ற மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

வடமாகாண சபைக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்துச் செல்வதைக் குறித்துக்காட்டுவதாக அவருடைய இந்த உரை அமைந்திருக்கின்றது.

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் தேர்தல் மூலமாக தமது மாகாணசபை உறுப்பினர்கள் பதவிக்கு வந்துள்ள போதிலும், அந்தச் சட்டம் தோல்வியடைந்த சட்டமாகவே இருக்கின்றது என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

வடமாகாண சபையின் பிரதம செயலாளர் மற்றும் இராணுவ பின்புலத்தைக் கொண்டுள்ள வடமாகாண ஆளுனர் ஆகியோருக்குப் பதிலாகப் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் உறுதியத்திருந்த போதிலும், அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் அவர் மீண்டும் இங்கு வலியுறுத்தி கூறியுள்ளார்.

இதன்போதே, ஐநா நிறுவனமும் கூட வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயற்பட்டிருப்பதாக அவர் அதிருப்தியோடு கருத்து வெளியிட்டிருக்கின்றார்.