ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளாஸ்கோ 2014: இலங்கை வீராங்கனை சந்திரிகா சுபாஷினி

Image caption சந்திரிகா சுபாஷினி

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு விழாவின் 6-வது நாள் போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றுவருகின்றன.

இதுவரை (ஜிஎம்டி 16.30 வரை) பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. நாலாவது இடத்தில் கனடா உள்ளது.

இந்தியா 8 தங்கம் அடங்கலாக மொத்தமாக 31 பதக்கங்களுடன் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பளுதூக்கும் போட்டியில் இந்தியாவே குறைந்தது 3 தங்கம் அடங்கலாக 10 பதக்கங்களுடன் முன்னிலையில் உள்ளது.

இலங்கை வீர வீராங்கனைகள் பெரிய அளவில் முன்னேற்றங்களை காட்டவில்லை.

இதனிடையே, 400 மீட்டர் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்த இலங்கையின் ஓட்ட வீராங்கனை சந்திரிகா சுபாஷினியால் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியவில்லை.

எனினும், இந்தப் போட்டியில் இந்த ஆண்டில் தனது சிறந்த ஓட்ட நேரத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

'நம்பிக்கை தளரவில்லை': சுபாஷினி

முதற்சுற்று போட்டியில் (ஹீட் போட்டியில்) மூன்றாடம் இடத்துக்கு வந்த இந்திய வீராங்கனை, இரண்டாம் இடத்துக்கு வந்த நைஜீரிய வீராங்கனை என எல்லோரையும் முந்திக் கொண்டு, 53.75 செக்கன்டுகளில் போட்டித் தூரத்தைக் கடந்து முதலிடத்துக்கு வந்திருந்தார் சுபாஷினி.

அதன்மூலம், அடுத்து நடந்த அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்த சுபாஷினியால் நான்காம் இடத்தையே பெற முடிந்தது. அவருக்கு முன்னால் ஜமேக்கா, இங்கிலாந்து, நைஜீரிய வீராங்கனைகளே முதல் மூன்று இடங்களுக்கு வந்தனர்.

எனினும், சுபாஷினி இந்த ஆண்டில் இந்த விளையாட்டில் தான் பதிவு செய்துள்ள மிகக் குறைவான ஓட்ட நேரமாக (சீஸனல் பெஸ்ட் -டைம்) 52.67 விநாடிகளில் போட்டித் தூரத்தைக் கடந்திருந்தார்.

போட்டியில் ஓடி முடித்தவுடன் பிபிசிய தமிழோசையுடன் தனது மனநிலையை பகிர்ந்துகொண்ட சுபாஷினி, தனது ஓட்ட நேரம் குறித்து திருப்தி வெளியிட்டார்.

'0.3 அளவான, மிகவும் குறைந்த நேரத்தில் ஒலிம்பிக் தகுதிக்கான நேர வாய்ப்பை இழந்திருக்கின்றேன். எனினும் எதிர்காலத்தில் மிகவும் இலகுவில் ஒலிம்பிக் தகுதி நேரத்தை என்னால் அடையமுடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கின்றது' என்றார் சந்திரிக்கா.

27 வயதான சந்திரிகா சுபாஷினி, 2006-ம் ஆண்டு ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் முதல்கொண்டு பல சர்வதேச விளையாட்டு விழாக்களில் 100, 200, 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

2011-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் அவர் வென்றிருந்தார்.

'ஏழை விவசாய குடும்பம்'

குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாய குடும்பம் ஒன்றிலிருந்து பல சிரமங்களுக்கு மத்தியில் தான் இந்த விளையாட்டுத் துறையில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்திரிகா சுபாஷினி தமிழோசையிடம் தெரிவித்தார்.

'இன்று கிளாஸ்கோ நகரில் அரையிறுதிப் போட்டிவரை வந்து, எனது சிறந்த ஓட்ட நேரத்தை நான் பதிவு செய்திருக்கின்றேன். இன்று உங்களோடு பேசிக்கொண்டிருக்கின்ற நான் நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர என்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தில் உள்ள விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள். எனது தந்தை ஒரு விவசாயி. எனது தாய் ஒரு உடற்பயிற்சி ஆயிரியை. எனக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உள்ளனர்' என்றார் சந்திரிகா.

'மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் முன்னேறி வந்த விளையாட்டு வீராங்கனை என்ற ரீதியில் இன்று நான் இருக்கின்ற இடம் குறித்து நூறு வீதம் மகிழ்ச்சி அடைகின்றேன். இன்னும் என்னால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது' என்றும் கூறினார் சந்திரிகா சுபாஷினி.

தம்மைப் போன்ற விளையாட்டு வீர வீராங்கனைகளைத் தேடிப்பிடித்து அரசு இன்னும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால், தம்மால் இன்னும் முன்னேற்றம் காட்ட முடியும் என்றும் அவர் கூறினார் .