ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

1983-2009: யுத்தகால காணி உரித்து தொடர்பில் புதிய சட்டத் திருத்தம்

இலங்கையில் தனியார் காணியை, 10 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித தடைகளும் இன்றி வைத்திருந்த காரணத்தைக் காட்டி, அதனைச் சொந்தமாக்கிக் கொள்ள இருக்கின்ற சட்ட ஏற்பாடு, வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் யுத்த காலத்துக்கு பொருந்தாது என்று கூறுகின்ற புதிய சட்ட மசோதா தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்துவருகின்றது.

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் நிலவிய யுத்த சூழ்நிலைகள் காரணமாக தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறியவர்கள், அவர்களின் காணி உரிமையை மீளப் பெற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருமாறு எல்எல்ஆர்சி ஆணைக்குழு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது.

1983-ம் ஆண்டு மே முதலாம் திகதி தொடக்கம் 2009-ம் ஆண்டு மே 18-ம் திகதி வரையான காலப்பகுதிக்கும் மட்டும் பொருந்தும் விதத்தில், ஆட்சியுரிமைக் கட்டளைச் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டுவரப்படுகின்றது.

குறிப்பிட்டக் காலப்பகுதிக்குள் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக தமது அசையாச் சொத்துக்கான உரிமையை பாதுகாப்பதற்கு இயலாதவராக இருந்து வெளியேறியவர்களுக்கே புதிய சட்டத் திருத்தம் ஏற்புடையதாகின்றது.

Image caption வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் யுத்த காலத்தில் பெருமளவான மக்கள் தமது காணிகளை விட்டு வெளியேறியிருந்தனர்

இந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி ஓராண்டு காலப்பகுதிக்குள் சட்டபூர்வ சொந்தக் காரர்கள் தமது காணிக்கான உரித்தினை நீதிமன்றத்தினூடாக கோர முடியும்.

'எனினும் புதிய சட்டம் முதல் 12 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகுமாக இருந்தால், அதன் பின்னர் போடப்படும் வழக்குகள் நடைமுறையில் எப்படி அமையும் என்பதை நீதிமன்ற வழக்குகளில் தான் தீர்மானிக்கலாம்' என்று வழக்கறிஞர் கே.வி. எஸ். கணேஷராஜன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பெருமளவான மக்கள் குடியிருப்பு காணிகள் ஆயுதப்படைகளின் பாவனைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வெளிநாட்டவர்களுக்கு காணி விற்பதில் கொண்டுவரப்பட்ட தடை தொடர்பான மற்றுமொரு சட்டமூலத்திற்கும் இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் 100 வீதம் முத்திரைக் கட்டணம் செலுத்தி வெளிநாட்டவர்கள் காணி வாங்கலாம் என்று இருந்த சட்ட ஏற்பாடு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, (தொடர்மாடிகளில் 4-ம் மாடி அல்லது அதற்கு மேல் உள்ள குடியிருப்புகளைத் தவிர) வெளிநாட்டவர்களுக்கான காணி விற்பனை இலங்கையில் முழுமையாகத் தடை செய்யப்பட்டது.

இந்த சட்டம் தொடர்பான புதிய திருத்தச் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை அதிகாரிகளை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.