பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் இலங்கை இராணுவச் சிப்பாய்

Image caption இலங்கைப் படையினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் பிரதேசத்தில் சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, நடத்தப்பட்ட விசாரணைகளில் இராணுவ சிப்பாய் ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகக் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் இம்மாதத்தின் முற்பகுதியில் நடைபெற்றது என்றும், நான்கு நாட்களுக்கு பிறகே இதுபற்றி தங்களிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

பதினான்கு வயதுடைய பாதிக்கப்பட்ட சிறுமி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என மருத்துவ பரிசோதனை நடத்திய சட்டவைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் காவல்துறை கூறுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சாட்சியொருவரும் தகவல் வழங்கியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய இராணுவச் சிப்பாய் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டிருக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, மேல் விசாரணைகளை நடத்துமாறு காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.