தமிழகம்: இடைத் தேர்தல்களுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தஞ்சாவூர் தொகுதியில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும், அரவக்குறிச்சி தொகுதியில் கே.சி. பழனிச்சாமியும், திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் தொகுதியில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும், அரவக்குறிச்சி தொகுதியில் கே.சி. பழனிச்சாமியும், திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதியிலும் தஞ்சாவூர் தொகுதியிலும் ஏற்கனவே போட்டியிட்டவர்களே தற்போதும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. சார்பில் போட்டியிட விண்ணப்பித்த வேட்பாளர்களின் நேர்காணல் இன்று முடிந்த நிலையில், தி.மு.க. இந்த அறிவிப்பைச் செய்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் தருவது உள்ளிட்ட முறைகேடுகளின் காரணமாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சீனிவேல், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் மணிமாறனைவிட 22 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். ஆனால், பதவியேற்பதற்கு முன்பாகவே மரணமடைந்தார்.

இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அ.தி.மு.க. ஏற்கனவே இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அக்கட்சியும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் முன்னர் போட்டியிட்ட வேட்பாளர்களையே தற்போதும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி சார்பில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்