நியூயார்க் இசை-நாடக அரங்கில் தூவப்பட்ட மர்ம தூள் மனித சாம்பலா?

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிரசித்தி பெற்ற மெட்ரோபொலிட்டன் ஓபரா ஹவுஸ் என்ற இசைநாடக அரங்கில் சனிக்கிழமையன்று (நேற்று) பார்வையாளர்களில் ஒருவர் தகன சாம்பல் என்று சந்தேகிக்கப்படும் தூளை அவ்வரங்கில் இருந்த இசை குழுவின் மீது தெளித்த பிறகு, அவ்வரங்கத்தில் நடைபெற வேண்டிய பிற்பகல் காட்சி நிறுத்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஓபரா ஹவுஸ்

கியோம் டெல் என்ற இசைக்குழுவின் நிகழ்ச்சி இடைவேளையின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், இது குறித்து சோதனை நடத்த தீவிரவாத எதிர்ப்பு பிரிவுகள் இந்த அரங்கு அமைந்துள்ள லிங்கன் மையத்துக்கு வந்தன.

இந்த சம்பவம் நடைபெற்ற போது , அரங்கில் இருந்த ஒரு நபர் தனது நண்பரின் சாம்பலை தூவுவதற்காக தான் அரங்குக்கு வந்ததாக கூறியதாக அவ்விரங்கில் இருந்த பல பார்வையாளர்கள் குறிப்பிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தகன சாம்பல் என்று சந்தேகிக்கப்படும் தூளை தூவிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த தற்போது போலீசார் அவரை நெருங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் நடைப்பெற்ற 9/11 தாக்குதளுக்கு பிறகு நியூயார்க் நகரில் உள்ள கலாச்சார மையங்கள் தாக்கப்படலாம் என்ற சாத்தியமான அச்சுறுத்தல்களால் எச்சரிக்கையாகவே உள்ளன.

என்னவென்று தெரியாத தூளை அந்நபர் தூவியதால், ஓபரா அரங்கில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.