ஜெயலலிதாவின் தேர்தல் களம் : பிரமிக்கத்தக்க வெற்றிகள், சில படுதோல்விகள்

  • 5 டிசம்பர் 2016

மறைந்த தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா, கடந்து வந்த தேர்தல் பாதை குறித்து கண்ணோட்டம்.

1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயலலிதா போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, திமுக வேட்பாளர் முத்து மனோகரனை வெற்றி கொண்டு, முதல் முறையாக தமிழக சட்டமன்றத்தில் காலடியெடுத்து வைத்தார்.

தான் முதல்முறையாக தமிழக முதல்வரான 1991-ஆம் ஆண்டில், அப்போதயை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் மற்றும் மேற்கு பகுதியான ஈரோடு மாவட்டத்தின் காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா இரண்டு தொகுதிகளிலும் வென்றார்.

Image caption ஜெயலலிதா

பர்கூரில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழக முன்னேற்றக் கழகத்தின் டி.ராஜேந்தரை ஜெயலலிதா வென்றார். காங்கேயம் தொகுதியில் ஜெயலலிதா, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ராஜ்குமார் மன்றாடியாரை வென்றார். பின்னர், காங்கேயம் தொகுதியை ஜெயலலிதா ராஜினாமா செய்தார்

1996-ஆம் ஆண்டு மீண்டும் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு முதல் முறையாக தோல்வியைத் தழுவினார். திமுகவின் சுகவனம் 8000-க்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதாவை அதிர்ச்சித் தோல்வியடைய செய்தார்.

2001-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட மனு செய்ததால் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. பின்னர், 2002ஆம் ஆண்டு நடந்த ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா. இத்தேர்தலில், திமுகவின் வைகை சேகரை ஜெயலலிதா வெற்றி கொண்டார்.

2006-ஆம் ஆண்டில் மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். இத்தேர்தலில் ஜெயலலிதா 73,927 வாக்குகளையும் திமுகவின் சீமான் 48,741 வாக்குகளையும் பெற்றார்.

Image caption 2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்ற ஜெயலலிதா

2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா மத்திய பகுதியான ஸ்ரீரங்கம் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார். அங்கு போட்டியிட்டு வென்ற ஜெயலலிதா, 1,05,328 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ஆனந்த் 63,480 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்ததால், தனது சட்டமன்ற பதவியை இழந்த ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்திருப்பதால் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார்.

ஜெயலலிதா போட்டியிட வசதியாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் மகேந்திரனை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ஆர். கே.நகர் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை வெற்றி கொண்ட ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்