தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர்: சசிகலா, தினகரன் பெயரை குறிப்பிட்டதற்கு திமுக எதிர்ப்பு

தமிழக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்வதற்கான சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை)துவங்கிய நிலையில், சசிகலா, தினகரன் ஆகியோர் பெயரைக் குறிப்பிட்டதற்காக தி.மு.க. எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது.

படத்தின் காப்புரிமை TNGOVT
Image caption தொடங்கியது தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

2017-18-ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்படுகிறது. இன்று காலையில் சட்டப்பேரவை கூடியவுடன் நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் அறிக்கையை தாக்கல்செய்ய ஆரம்பித்தார்.

பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு முன்பாக, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.

இதையடுத்து, தி.மு.கவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

"நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களின் பெயர்களை நிதியமைச்சர் குறிப்பிடுகிறார். பிறகு இதுவே மரபாகிவிடும். ஆகையால் அவர்களது பெயரை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரினார்.

"நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில்கூட போட்டியிட முடியும். வழக்குகளில் மேல் முறையீடு செய்ய முடியும். இது தொடர்பாக ஏற்கனவே விவாதித்து நான் எனது முடிவை அறிவித்திருக்கிறேன். ஆகவே எதிர்க்கட்சியினர் பிரச்சனை ஏற்படுத்தக்கூடாது" என சபாநாயகர் தனபால் கூறினார்.

பிறகு அவை முன்னவர் செங்கோட்டையனும் இது தொடர்பாக விளக்கமளித்தார். இதற்குப் பிறகு தற்போது நிதியமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்