சீன உய்கர் முஸ்லிம் பிரதேசங்களில் இராணுவ குவிப்பு ஏன்? பிபிசியின் பிரத்யேக செய்தி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீன உய்கர் முஸ்லிம் பிரதேசங்களில் இராணுவ குவிப்பு ஏன்? பிபிசியின் பிரத்யேக செய்தி

  • 17 மார்ச் 2017

சீனாவின் மேற்குப்பிராந்தியத்திலுள்ள இஸ்லாமிய பிரிவினைவாதிகளே நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலென சீன அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் மிகப்பெரிய மேற்குப்பிராந்தியமான சின்ஜியாங்கை பாதுகாக்கப்போவதாக சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

அந்த பிராந்தியத்தில் ஒருகோடி உய்கர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள்.

சிரியாவிலிருந்தும் இராக்கிலுருந்தும் வரும் பிரச்சாரங்கள் மூலம் இந்த உய்குர் முஸ்லிம்கள் தீவிரவாதம் நோக்கி ஈர்க்கபடக்கூடுமென சீன அரசு அஞ்சுகிறது.

தெற்கு சிங்க்ஜாங் பிரதேசம் ஒருகாலத்தில் சீனாவுக்கும் மேற்குலகுக்கும் இடையிலான பட்டு வணிகப்பாதையாக அறியப்பட்ட இடம்.

இன்று சீன அரசால் "பயங்கரவாதத்துக்கெதிரான போரின்" முன்னரங்காக வர்ணிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் இதுவரை அரசால் உறுதி செய்யப்பட்ட ஒரே தாக்குதல் சம்பவம் பி ஷான் என்கிற இடத்தில் நடந்தது.

அங்கே மூன்று உய்கர் இளைஞர்கள், ஹான் சீனர்களை நடுத்தெருவில் வைத்து கத்தியால் தாக்கியதில் ஐந்துபேர் கொல்லப்பட்டனர்.

தாக்கியவர்களை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதில் தொடர்புடையவர்கள் குறித்த விவரம் தருவோருக்கு மிகப்பெரிய ஊக்கத்தொகையை அரசு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதை இங்குள்ள சிலர் வரவேற்கிறார்கள்.

திரும்பிய பக்கமெல்லாம் பாதுகாவலர்கள் இருப்பதால் இப்போது பயமின்றி நடமாட முடிவதாக கூறுகிறார்கள்.

அந்த பிராந்தியத்தில் பெரிய தொழில் வாய்ப்புகள் இல்லை.

எனவே பின் தங்கிய பிராந்தியமாக இருக்கும் இந்த இடத்தில் வாழும் இளம் தலைமுறையினர் வாய்ப்பு கிடைத்தால் இங்கிருந்து வெளியேறவே விரும்புகிறார்கள்.

ஆனால் இவர்கள் எங்கே செல்வார்கள் என்பதே சீன அரசின் கவலை.

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பு இராக்கிலுள்ல உய்கர்கள் சீனாவில் இரத்த ஆறு ஓடும் என்று எச்சரிக்கும் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

ஐ எஸ் அமைப்பினர் சீனாவுக்குள் வந்து கொலை செய்வார்களென சீன அரசு அஞ்சுகிறது.

எனவே சின் ஜாங்கில் மதம் மீதான கண்காணிப்பும் அழுத்தமும் தொடர்ந்து அதிகரிக்கிறது.

மசூதிகளில் இளம் தலைமுறையினரை காண முடிவதில்லை. வயதானவர்கள் தவிர மற்றவர்களிடம் தாடி இருக்கவில்லை.

திரும்பும் பக்கமெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களை நன்றியுடன் நினைத்துப்பார்க்கக்கோரும் பிரச்சாரம்.

எல்லா இடங்களிலும் கவசமணிந்த ஆயுதப்படையினர்.

சீன அரசின் இத்தகைய அடக்குமுறையே பயங்கரவாத குழுக்களுக்கான ஆட்சேர்ப்பை அதிகரிக்குமென வெளிநாட்டு விமர்சகர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஆனால் சீன அரசோ வெற்றி தனதே என பதிலளிக்கிறது. அது நடக்கும்வரை ஒவ்வொரு உய்கரும் சந்தேக நபரே.

அந்த பகுதிக்கு நேரில் செல்ல பிபிசிக்கு பிரத்யேக அனுமதி கிடைத்தது. அங்குள்ள நிலைமைகள் குறித்து பிபிசியின் பிரத்யேக செய்திக்குறிப்பு.