மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு: 99 வயதிலும் வில்லாய் வளையும் யோகா பாட்டி தனது வாக்கை பதிவு செய்தார்

நானம்மாள்

கோவையைச் சேர்ந்த 99 வயதான நானம்மாள், தற்போதும் தீவிர யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு, கற்றுக்கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக ஜனாதிபதியின் பெண் சக்தி விருதை வென்றிருக்கும் நானம்மாள், இந்தியாவின் மிக வயதான யோகாசன ஆசிரியர்.

இவர் மக்களவைத் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார்.

படக்குறிப்பு,

நானம்மாள்

கோயம்புத்தூரின் கணபதி பகுதியில் வசிக்கும் நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டில் பிறந்தவர். விவசாயக் குடும்பம். தனது தாத்தா மன்னார்சாமியிடமிருந்து யோகாசனப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நானம்மாள், அந்தப் பயிற்சியை 90 ஆண்டுகளுக்குப் பிறகும் விடவில்லை.

நானம்மாளுக்கு திருமணம் ஆன பிறகு, புகுந்த வீட்டில் அவரது யோகா பயிற்சியை சற்று விசித்திரமாகப் பார்த்திருக்கின்றனர். பிறகு, "என்ன எப்போது பார்த்தாலும் கை, காலை ஆட்டிக்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்க ஆரம்பித்தனர்.

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு,

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

"ஆனால், அந்த வீட்டில் இருந்த பெண்கள் சிலர் வயல் காட்டு வேலையை முடித்துவிட்டு வந்து உடல் வலி என்று அமரும்போது, அவர்களுக்கு சில பயிற்சிகளைச் சொல்லித் தருவேன். அவர்களது உடல் வலி சரியானபோது என்னை நம்ப ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு யாரும் என்னைத் தொந்தரவு செய்யவில்லை" என்று நினைவுகூர்கிறார் நானம்மாள்.

காணொளிக் குறிப்பு,

கோயம்புத்தூரைச் சேர்ந்த 98 வயது யோகா பாட்டி

கணவர் சித்த வைத்தியர் என்பதால், அவர் நானம்மாளின் பயிற்சிக்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். ஒட்டுமொத்தமாக 11 கொள்ளுப்பேரன் - பேத்திகள்.

"கடந்த 15-20 ஆண்டுகளாகத்தான் யோகாசன பயிற்சியை பணம் வாங்கிக்கொண்டு சொல்லித்தருகிறோம். அதற்கு முன்பாக இலவசமாகத்தான் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள்தான் அப்போது கற்றுக்கொண்டார்கள்" என்கிறார் நானம்மாள்.

சில மாதங்களுக்கு முன்பாக கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும், தற்போதும் சர்வாங்காசனம், ஹாலாசனம் போன்ற கடினமான பயிற்சிகள் செய்வதை அவர் விடவில்லை. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக யோகா பயிற்சியைச் செய்துவரும் நானம்மாளின் குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர் தற்போது யோகாசனத்தைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

யோகாசன பயிற்சியின் காரணமாகவே இதுவரை தான் மருத்துவமனைகளை நாடியதில்லை என்கிறார் நானம்மாள். தனது குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவருமே சுகப்பிரசவம் மூலமே குழந்தைகளைப் பெற்றனர். அதற்குக் காரணம் யோகா பயிற்சிதான் என்கிறார் நானம்மாள்.

தற்போது தனது இல்லத்திலேயே காலையிலும் மாலையிலும் எல்லா வயதினருக்குமாக தன் மகன் பாலகிருஷ்ணனுடன் சேர்ந்து யோகாசனப் பயிற்சியை அளித்துவருகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :