அமெரிக்காவை மிரட்டும் வடகொரிய ஏவுகணைத் திட்டம்

ஹூவாசாங் ஏவுகணை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

ஹூவாசாங் ஏவுகணை

வடகொரியாவிடம் வெவ்வேறு திறன்களில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த பட்டியலில் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும் அடங்கும். அவை என்றாவது ஒருநாள் அமெரிக்காவை தாக்கலாம்.

வடகொரியாவின் திட்டம், கடந்த சில தசாப்தங்களாக 1960களில் மற்றும் 70களில் இருந்த தந்திரோபாய எறிகணைகளிலிருந்து குறைந்த தூரம் மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளாக முன்னேறியுள்ளது.

நீண்ட தூர எல்லைகளை தாக்கும் திறன் படைத்த அமைப்புகள் தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அளவில் இருப்பது புரிந்து கொள்ளப்படுகிறது.

மிக சமீபத்தில், மேற்கில் உள்ள இலக்குகளை கூட தாக்கும் திறன் படைத்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை மேம்படுத்தி வருவதாக வட கொரியா அறிவித்திருந்தது.

ஏவுகணை தூரம்

குறைந்த தூரம் : 1000 கிமீ அல்லது அதற்கும் குறைவாக

நடுத்தர தூரம் : 1000 - 3000 கிமீ

இடைநிலை தூரம் : 3000 - 5,500 கிமீ

தொலைத்தூரம் : 5,500 கிமீ மேல்

ஏவுகணை தூரம்

குறைந்த தூர ஏவுகணைகள்

வடகொரியாவின் நவீன ஏவுகணை திட்டம் பேலிஸ்டிக் ஏவுகணைகள் தொடரின் மூலம் ஆரம்பமானது. அதன் முதல் ஏவுகணைத் தொகுதியானது எகிப்து வழியாக 1976 ஆம் ஆண்டு வந்ததாக கூறப்படுகிறது.

1984-ல், வடகொரியா தனது சொந்த ஹுவாசாங்ஸ் ஏவுகணைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.

அண்டை நாடான தென் கொரியாவை குறிவைக்கும் நோக்கில் பல வகையான குறைந்த தூர ஏவுகணைகள் வடகொரியா வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது ஆபத்தான நிலையிலே உள்ளது. குறிப்பாக சொல்லப் போனால் போர் சூழும் அபாயத்திலேயே இருந்தது வருகிறது.

ஹுவாசாங்-5 மற்றும் ஹுவாசாங்-6 ஆகிய ஏவுகணைகள் முறையே 300 மற்றும் 500 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடியவை என்று அணு ஆய்வுக்கான அமெரிக்க மையம் தெரிவித்துள்ளது.

இந்த இரு ஏவுகணைகளும் பரிசோதிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதில், ஹுவாசாங் 6 ஏவுகணை இரானிடம் விற்கப்பட்டும் உள்ளது.

நடுத்தர தூர ஏவுகணைகள்

முசுடான் ஏவுகணை

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

முசுடான் ஏவுகணை

1980களில் நோடோங் என்று அறியப்பட்ட புதிய நடுத்தர தூர ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று வடகொரியா விரும்பியது. அதன் தாக்கும் தூரம் சுமார் 1000 கிலோ மீட்டர்.

ஸ்கட் எனப்படும் பேலிஸ்டிக் ஏவுகணைகளின் வடிவமைப்பை இது கொண்டிருந்தன. ஆனால், 505 பெரியதாகவும், மிகவும் சக்திவாய்ந்த என்ஜின் ஒன்றையும் அது கொண்டிருந்தன.

2006, 2009, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நோடோங்ஸ் ஏவுகணை சோதனை ரீதியாக பரிசோதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

மத்திய தர ஏவுகணைகள்

பல ஆண்டுகளாக வடகொரியா முசுடான் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது.

சமீபத்தில் 2016ல் பல சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது.

இதன் தாக்கும் தூரத்தின் கணிப்பில் வியத்தகு அளவில் வேறுபாடுகள் உள்ளன. இஸ்ரேலிய புலனாய்வு நிறுவனம் சுமார் 2,500 கிலோ மீட்டர் என்றும், அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு நிறுவனம் சுமார் 3,200 கிலோ மீட்டர் என்றும் கணித்துள்ளது.

முசுடானின் கீழ் வரம்பு ஏவுகணை நோடோங்-பி அல்லது தி டெபோடோங்-எக்ஸ் என்ற அறியப்படுகிறது. தென் கொரியா மற்றும் ஜப்பானின் மொத்த பகுதியை தாக்கும் திறன் படைத்தது இது.

இதன் உயர் வரம்பு ஏவுகணை குவாமில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைக்கும் திறன் படைத்தது. அதன் ஏற்றிச்செல்லும் எடைத்திறன் இன்னும் தெரியவில்லை. ஆனால், 1 முதல் 1.23 டன்கள் வரையிலான எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.

பல்லடுக்கு ஏவுகணைகள்

டேபோடோங்-1 என்ற ஏவுகணை வடகொரியாவில் பேக்டுசான்-1 என்று அறியப்படுகிறது. நாட்டின் முதல் பல்லடுக்கு ஏவுகணை இது. 1998 ஆம் ஆண்டு இது பரிசோதிக்கப்பட்டது.

சுதந்திரமான சிந்தனை அமைப்பான எஃப் ஏ எஸ் எனப்படும் அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு, முதல் நிலை நோடோங் ஏவுகணை என்றும், இரண்டாம் நிலை ஹுவாசாங் 6 என்றும் நம்பப்படுகிறது.

முசுடான் ஏவுகணை

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

முசுடான் ஏவுகணை

அதனைத்தொடர்ந்து, டேபோடோங்-2 அல்லது பேக்டுசாங்-2 என்ற இரண்டிலிருந்து மூன்று நிலை பேலிஸ்டிக் ஏவுகணை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளில் விமானம் கொண்டு பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் தாக்கும் தூரம் சுமார் 5000 மற்றும் 15,000 கி.மீ இடையே என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அணு ஆய்வுகளுக்கான மையம் இதன் தாக்கும் தூரத்தை 6,000 கி.மீட்டராக கணித்துள்ளனர்.

டேபோடாங்-2 வெற்றிகரமாக ஏவப்பட்டால் மற்றும் அதன் உச்சபட்ச தாக்கும் தூரத்தை எட்டினால் அதன் அதிகரித்த சக்தி ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகள் மற்றும் இதர நாடுகள் அதன் தாக்கும் எல்லைக்குள் வந்துவிடும்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்

மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வட கொரியா மேம்படுத்தி வருவதாக நம்பப்படுகிறது.

சாலையில் நகர்ந்தபடியே செல்லும் திறன் படைத்த இந்த எவுகணைக்கு பார்வையாளர்கள் கெ.என்-08 அல்லது ஹுவாசாங்-13 என்று பெயரிட்டுள்ளனர்.

வடகொரியாவிடம் குறைந்தது ஆறு கெ.என் - 08 ஏவுகணைகள் இருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் நம்புகிறது. அமெரிக்காவின் பெரும் பகுதியை சென்று சேரும் திறன் படைத்தது.

ராணுவ அதிகாரிகளுடன் வடகொரிய தலைவர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

ராணுவ அதிகாரிகளுடன் வடகொரிய தலைவர்

கெ.என் - 14 என்ற மேம்பட்ட ஏவுகணையை வடகொரியா தயாரித்துள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், இதுவரை இந்த ஏவுகணைகள் பொதுவெளியில் சோதிக்கப்படவில்லை.

ஆனால், கடந்த ஜனவரி மாதம் அண்மையில் நிகழ்ந்த பரிசோதனை குறித்த அறிகுறிகள் தென்பட்ட நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மேம்படுத்தும் முயற்சியில் கடைசி நிலையில் வடகொரியா இருப்பதாக தலைவர் கிம் ஜோங் உன் அறிவித்தார்.

தற்போது அதனையும், வடகொரியாவிடம் சிறிதாக்கப்பட்ட அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணைகள் உள்ளன என்று முன்னர் கூறியதையும் வைத்துப் பார்க்கும் போது, நீண்ட தூரம் செல்லும் அணு ஆயுத ஏவுகணை தயாரிப்பில் வடகொரியா நெருங்கிவிட்டதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வல்லுநர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்