இலங்கை வெள்ளம், நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 196 ஆக உயர்வு

  • 30 மே 2017

இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களில் அகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளது. 99 பேரைக் காணவில்லை.

Image caption பாதிக்கப்பட்ட மக்கள்

திங்கட்கிழமை இரவு வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 . காணமல் போனவர்களின் 103 என அரசு பேரிடர் முகாமைத்துவ அறிக்கையிடப்பட்டிருந்தன.

காணாமல் போனதாக ஏற்கனவே பதிவிடப்பட்டிருந்தவர்களில் சிலர் சடலங்களாக மீட்கப்பட்டதையடுத்தே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதுவரையில் 293 பேர் உயிரிழந்தும் காணாமலும் போயுள்ளனர். 63 பேர் காயமடைந்துள்ளதாக செவ்வாய்கிழமை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களில் பதிவிடப்பட்டுள்ளது.

மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி அதிகரித்துள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தின் துனை இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி கூறுகின்றார்.

ஒரு இலட்சத்து 57 ஆயிரம் குடும்பங்களை கொண்ட 6 இலட்சத்து 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குடும்பங்களில் 21 ஆயிரம் குடும்ப உறுப்பினர்களான 83 ஆயிரம் பேர் 376 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுளனர்.

1402 வீடுகள் முழுமையாகவும் 7071 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

வீடுகளை விட்டு வெளியேறிய குடும்பங்கள்

இதற்கிடையில் நுவரெலியா, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் நிலச் சரிவு ஆபத்து உணரப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் பெற்றுள்ளன.

Image caption தொடரும் மீட்புப்பணி

இரத்தினபுரி மாவட்டம் இரு இடங்களில் நிலச்சரிவு ஆபத்து அறிகுறிகள் உணரப்பட்ட நிலையில் 60 குடும்பங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசாங்க பள்ளி கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டம் பத்தனை பிரதேசத்தில் 4 குடியிருப்புகள் நிலச்சரிவு அச்சுறுத்தல்களுக்குள்ளான நிலையில் 35 குடும்பங்களும் அக்கரைப்பத்தனை பிரதேசத்தில் 5 குடும்பங்களும் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் பெற்றுள்ளன.

மாத்தறை மாவட்டத்திலும் தெனியாய பிரதேச்தில் 43 குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பள்ளிக் கூடமொன்றில் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்வையிடச் சென்ற 18 பேர் பலி

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களை பார்வையிட சென்றிருந்த 18 பேர் இதுவரையில் அதில் சிக்கி பலியாகியுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

அபாயகரமான அந்த பிரதேசங்களுக்குள் செல்ல வேண்டாம் என ஏற்கனவே பொது மக்களுக்கு போலிஸாரால் அடிக்கடி அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்தாக போலிஸ் ஊடகப் பேச்சாளரான துனை போலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்திருக்கின்றார்.

Image caption மலையகத்திலும் சில குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன

தேவையற்ற வகையில் இந்த பிரதேசங்களுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டமையால்தூரதிஷ்டவசமாக இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

எனவே பொது மக்களை தேவையின்றி அந்த பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிடுகின்றார் .

இலங்கை நிலச்சரிவு: நோய் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை

மூதூர் பாலியல் வன்முறை - சிறப்புக் குழு விசாரணை கோருகிறார் கிழக்கு மாகாண முதல்வர்

இயற்கை சீற்றத்தால் இலங்கையில் 2 லட்சம் பேர் பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்