புதுச்சேரியில் `குடியரசுத் தலைவர் ஆட்சியா`? – முதல்வர் நாராயணசாமி சாடல்

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை முடக்க முயற்சிக்கும் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதையொட்டி, "காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்" என்ற முறையில் நாராயணசாமி, தில்லிக்கு வந்து, வேட்பு மனு தாக்கல் நிகழ்வின்போது உடனிருந்தார்.

பின்னர் புதுச்சேரி அரசு விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு நாராயணசாமி பேட்டியளிக்கையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடா?

இது குறித்து பிபிசி தமிழிடம் நாராயணசாமி மேலும் கூறுகையில், புதுச்சேரி மருத்துவ மேல்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக கிரண் பேடி சிபிஐயிடம் புகார் அளித்தார் என்று குறிப்பிட்டார்.

அதன்பேரில் சென்டாக் அதிகாரிகளிடம் சிபிஐ செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது என்றும் இந்த விவகாரத்தில் விதிகளையும் அதிகாரத்தையும் மீறி கிரண் பேடி செயல்பட்டுள்ளார் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை KIRAN BEDI
Image caption கிரண் பேடி

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை அனைத்தும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படுவதாகவும் இதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று நாராயணசாமி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன், அதன் செயல்பாடுகளை கிரண் பேடி முடக்க முயல்வதாகவும், அது ஒருபோதும் நிறைவேறாது என்றும் நாராயணசாமி குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் உள்ளபோது, யூனியன் பிரதேசத்தில் "குடியரசு தலைவர் ஆட்சி உள்ளது போல" கிரண் பேடி செயல்படுகிறார் என்று நாராயணசாமி குறை கூறினார்.

மக்களின் கவனத்தை தனது பக்கம் ஈர்க்கும் வகையில், விளம்பரத்துக்காக கிரண் பேடி செயல்படுவதால், அவரை துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குடியரசு தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் ஏற்கனவே வலியுறுத்தியதையும், பேட்டியின்போது நாராயணசாமி நினைவு கூர்ந்தார்.

இதையும் படிக்கலாம்:

பிரபல சஞ்சிகையின் அட்டைப்படத்தில் செரீனா 'நிர்வாண போஸ்'

சிறைக் கைதிகளை `குஷி`ப்படுத்திய ஆடை அவிழ்ப்பு நிகழ்வு

"தனிப் பெண்ணா? அறை கிடையாது": ஹோட்டல்

பால் கலப்பட சர்ச்சை: குற்றச்சாட்டுகள் உண்டு, நடவடிக்கைகள் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்