ட்ரம்ப் புடின் முதல் சந்திப்பு: உறவு மேம்படுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ட்ரம்ப் புடின் முதல் சந்திப்பு: அமெரிக்க ரஷ்ய உறவு மேம்படுமா?

  • 7 ஜூலை 2017

ஜெர்மனியில் நடக்கும் G-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் முதல்முறையாக நேரில் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டனர்.

இவர்களுக்கு இடையிலான உறவு குறித்த ஊகங்கள், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யத்தலையீடு குறித்த சர்ச்சைகள் மாதக்கணக்கில் நீடித்த பின்னணியில் இன்றைய சந்திப்பு வந்திருக்கிறது.

இந்த மாநாட்டில் எல்லோர் கவனமும் சர்ச்சைக்குரிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதே குவிந்துள்ளது.

மாநாட்டை நடத்தும் ஜெர்மானியத்தலைவி ஆங்கெலா மெர்க்கெல் விரைவில் தேர்தலை சந்திக்கிறார். புவி வெப்பமடைவதை தடுப்பதற்கான பாரிஸ் ஒப்பந்தத்தை நிராகரித்த ட்ரம்பை அவர் முன்பு கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஆனால் தற்போது தனது கடுமையான விமர்சனத்துக்கு நடுவே இணைந்து செயற்படக்கூடிய பொதுவிஷயங்களை அவர் தேடுகிறார்.

அதேசமயம் உண்மையான சண்டை என்பது ட்ரம்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் தான்.

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதற்கான சாத்தியம் இருக்கலாம் என இங்கே வரும் வழியில் ட்ரம்ப் ஒப்புக்கொண்டார்.

அதேசமயம் யுக்ரெய்னில் ரஷ்யாவின் செயல்பாடு அந்நாட்டை நிலைகுலையச் செய்வது என்று குற்றம் சாட்டினார்.

இதை புடினும் அவரது அரசும் மறுக்கின்றன.

ட்ரம்பும் புடினும் இணைந்து செயற்படக்கூடிய சாத்தியங்களை அவர்கள் இனம் காணக்கூடும்.

ஆனால் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட போட்டி, உலகின் இரு சக்திமிக்க பொருளாதார வல்லரசுகளுக்கு இடையிலான ஆழமான பிளவை காட்டுகிறது.

உலக வர்த்தகம் மற்றும் வடகொரியாவை எப்படி கையாள்வது ஆகிய இரண்டும் மிகப்பெரிய பிரச்சனைகளாக நீடிக்கின்றன

சீனாவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்துகின்றன.

வன்முறை தீவிரவாதத்துக்கான நிதியாதாரங்களை சட்டவிரோதமாக்க வேண்டும் என்கிற தன் கோரிக்கையை வலியுறுத்த இங்கே வந்திருக்கிறார் பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே.

தனிநபர் தாக்குதலாளிகளுக்கான நிதியுதவிகளைக்கூட கண்டுபிடித்து தடுக்கவல்ல சர்வதேச ஒத்துழைப்புக்கான புதிய யோசனைகளை அவர் முன்வைக்கிறார்.

பொதுவாக எல்லா மாநாடுகளுமே பிளவுகளை பெரிதுபடுத்துமென்றாலும் இந்த மாநாடு அதிலும் கூட வித்தியாசமானதாக தோன்றுகிறது.

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்