அணு ஆயுத லட்சியங்களை வட கொரியா அடையும்: கிம் ஜோங் -உன்

ஏவுகணை விண்ணில் பாய்வதைக் கவனிக்கும் கிம் ஜோங் அன்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

ஏவுகணை விண்ணில் பாய்வதைக் கவனிக்கும் கிம் ஜோங் அன்.

நாட்டின் அணு ஆயுத இலட்சியங்களை நிறைவேற்றுவேன் என்று வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் சூளுரைத்துள்ளார்.

வெகுதூரம் சென்று தாக்கக் கூடிய ஹுவாசாங் ஏவுகணை சோதனையை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தியது வட கொரியா. இந்த ஏவுகணை ஜப்பான் வான்வெளியைக் கடந்து சென்று ஹொக்கைடோ தீவுக்கு அருகே கடலில் விழுந்தது.

இதுவரை வடகொரியா ஏவியதிலேயே மிக நீண்ட தூரம் சென்றது இந்த ஏவுகணைதான் என்றும், பசிபிக் கடலில் உள்ள அமெரிக்காவின் குவாம் தீவு இதன் தாக்குதல் எல்லைக்குள் வருவதாகவும் கூறப்படுகிறது.

படக்குறிப்பு,

வடகொரியாவில் உள்ள ஏவுகணை வகைகளும், அவற்றின் திறனும்.

அந்த நிகழ்வை நேரில் பார்வையிட்ட கிம் ஜோங் - உன், அமெரிக்க ராணுவ துருப்புகளுக்கு இணையான ராணுவக் கட்டமைப்பை நிறுவுவதுதான் தமது இலக்கு என்று கூறியதாக கொரிய அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டு இருக்கிறது.

"வரம்பற்ற தடைகளை போட்டாலும், நாம் எப்படி அணு ஆயுத இலக்குகளை அடைகிறோம் என்பதை சக்தி படைத்த அதிகார வெறியர்களுக்கு காட்ட வேண்டும்" என்று கிம் பேசியதாக கே.சி.என்.ஏ. நிறுவனம் தெரிவித்துள்ளது.

நமது இலக்கு அமெரிக்க துருப்புகளுக்கு இணையான வலுவான ராணுவ கட்டமைப்பை நிறுவுவது. அதன் மூலம், அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்துப் பேசும் துணிச்சல் வராமல் செய்வது ஆகியவையே தமது நாட்டின் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை கடற்பரப்பில் விழுவதற்கு முன் சுமார் 770 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்து, 3,700 கிலோ மீட்டர் தூரம் பயணித்தது என்று தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :