உத்தவ் தாக்கரே: யார் இவர்? மகாராஷ்டிர அரசியலில் இவர் செய்தது என்ன?

உத்தவ் தாக்கரே படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உத்தவ் தாக்கரே

1996-97-ம் ஆண்டு. மும்பையின் தாதரில் பேட்மின்டன் விளையாட ராஜ் தாக்கரே செல்வது வழக்கம். பின்னர். தனது உறவு முறை அண்ணன் உத்தவ் தாக்கரேயை தன்னோடு விளையாட அவர் அழைத்தார்.

விளையாடியபோது, உத்தவ் தாக்ரே விளையாட்டு மைதானத்தில் தவறி விழுந்தார், அதனை பார்த்து ராஜ் தாக்ரேயும், அவரது நண்பர்களும் சிரித்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர், அந்த பேட்மின்டன் மைதானத்திற்கு விளையாடச் செல்வதை உத்தவ் தாக்ரே நிறுத்திவிட்டார். அவர் பேட்மின்டன் விளையாடுவதையே நிறுத்திவிட்டார் என்று அனைவரும் எண்ணினர்.

ஆனால், பேட்மின்டன் விளையாடுவதற்கு இன்னொரு மைதானத்தை உத்தவ் தாக்கரே தேர்வு செய்தார். ராஜ் தாக்ரேயின் பயிற்சியாளரையே தனக்கும் பயிற்சியாளராக நியமித்து கொண்டார்.

கொஞ்சம் நாட்களுக்கு பிறகு, "இப்போது உத்தவ் தாக்கரே சிறப்பாக பேட்மின்டன் விளையாடுகிறார் என்றும், தற்போதைய பேட்மின்டன் வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் போட்டியாளராக வளந்துள்ளார் என்றும் அந்த பயிற்சியாளர், தெரிவித்தார்.

சிவசேனை கட்சித் தலைவரான உத்தவ் தாக்கரேயின் தற்போதைய அரசியல் நிலையின் குறியீடாக உள்ளது இந்த சம்பவம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சிவசேனை கட்சி கூட்டம் ஒன்றில் தந்தை பால் தாக்கரேவுடன் உத்தவ் தாக்கரே.

மகாராஷ்டிர மாநில ஆளுநரை சந்தித்த சிவசேனை கட்சி, அம்மாநிலத்தில் அரசு அமைக்க அனுமதி கோரியது.

சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்சிபி), காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து அமைத்துள்ள வளர்ச்சிக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர முதல்வர் பதவி ஏற்கவுள்ளார் உத்தவ்.

சட்டமன்றத்தில் மொத்தம் 98 இடங்கள் வைத்துள்ள என்.சி.பி.யும், காங்கிரசும் சிவசேனை ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது என்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை முடிவெடுத்தன. மறுநாள் சிவசேனை ஆட்சி அமையும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இடைப்பட்ட ஓர் இரவில், என்.சி.பி. சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் திடீரென பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, ஆளுநர் பாஜகவின் தேவேந்திர பட்னாவிசை ஆட்சியமைக்க அழைத்து, காலையிலேயே அவருக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.

ஆனால் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உறுதியாக அஜித் பவார் பின்னால் செல்ல மறுத்து, சரத்பவார் உடன் நின்றனர்.

பாஜகவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது வளர்ச்சிக் கூட்டணி. புதன்கிழமை மாலைக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று பாஜக அரசுக்கு கெடு விதித்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து, தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் பதவி விலகினர்.

மீண்டும் அஜித் பவார் தனது சித்தப்பா சரத் பவாரை சந்தித்துப் பேசிவிட்டார்.

நான்கு நாட்களுக்கு முன்பு முதல் சுற்றில் பாஜகவின் ராஜதந்திர சுழலில் சிக்கிவிட்டதாக நினைக்கப்பட்ட தாக்கரே தற்போது அதில் இருந்து மீண்டு வெற்றி பெற்றுள்ளார். பேட்மின்டன் களத்தில் மட்டுமல்ல, அரசியல் களத்திலும் முதலில் விழுந்தவர், மீண்டு எழுந்துவிட்டார்.

தொடக்க நாள்கள்

"த தாக்கரே கசின்ஸ்" (The Thackeray Cousins) என்கிற புத்தகத்தை தவால் குல்கர்னி எழுதியுள்ளார். இதில் உத்தவ் தாக்ரேயின் அரசியல் வாழ்க்கையின் தொடக்க நாட்களை பற்றி அவர் விவரித்துள்ளார்.

"1990களில் உத்தவ் தாக்ரே அரசியலில் நுழைந்தார். 1985ம் ஆண்டு மும்பை நகராட்சித் தேர்தலில் சிவசேனை வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் சிவசேனை வெற்றிக்கு உத்தவ் தாக்ரே முக்கிய பங்காற்றினார். ஆனால், அந்நேரம் வரை அவர் முறையான அரசியலில் சேரவில்லை" என்று இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"1991ம் ஆண்டு, சிவசேனையின் முலுண்ட் அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றை ஷிஷிர் சின்டே ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். அரசியலில் உத்தவ் தாக்கரே அதிகாரபூர்வமாக நுழைந்ததை இந்த நிகழ்ச்சி குறித்தது" என்று தவால் குல்கர்னி தெரிவித்துள்ளார்.

சகோதரர்களுக்கு இடையில் மோதல்

1991 டிசம்பர் மாதம், ராஜ் தாக்ரே வேலையில்லா திட்டாட்டத்திற்கு எதிராக நாக்பூரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்.

"இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் இரவு பால்தாக்கரே வீடான மதோஸ்ரீயில் இருந்து ராஜ் தாக்கரேவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அடுத்த நாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ராஜ் தாக்கரே பேசுவதோடு, உத்தவ் தாக்கரேவும் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இது ராஜ் தாக்கரேவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதோடு, உறவு முறை சகோதரர்களுக்கு இடையே  பிளவையும் அதிகப்படுத்தியது" என்று தவால் குல்கர்னி தெரிவிக்கிறார்.

அந்நாட்களில் ராஜ் தாக்கரே சிவசேனையில் மிகவும் பிரபலமாக இருந்தார். ஆனால், அவரது ஆக்ரோஷமான பாணி அனைவரையும் கவரவில்லை. எனவே, உத்தவ் தாக்கரே முன்னிறுத்தப்பட வேண்டுமென பால் தாக்கரேயிடம் சிவசேனை தலைவர்கள் வலியுறுத்த தொடங்கினர்.

அதே நேரத்தில், ராஜ் தாக்கரேயின் பெயர் ரமேஷ் கினி கொலை வழக்கோடு தொடர்புப்படுத்தி பேசப்பட்டது. கொஞ்ச காலம் அரசியல் இருந்து அவர் ஒதுக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பத்திரிகையாளர் தினேஷ் துகண்டே இது பற்றி குறிப்பிடுகையில், "ரமேஷ் கினி கொலை வழக்கில் மத்திய புலனாய்வு துறையின் விசாரணையை ராஜ் தாக்ரே எதிர்கொண்டார். அவருக்கு எதிரான சான்றுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த காலத்தில் சிவசேனை கட்சியில் சிக்கல் தோன்றியது.

ராஜ் தாக்கரே இதற்கான விலையை கொடுக்க வேண்டியதாயிற்று. ரமேஷ் கினி கொலை வழக்கின் காரணமாக அரசியல் ரீதியில் ஐந்தாண்டு காலம் அவர் பின்னால் தள்ளப்பட்டிருந்தார்.

இந்த தருணத்தில்தான் உத்தவ் தாக்கரே முறைப்படியாக அரசியலில் நுழைந்தார். 1997ம் ஆண்டு நடைபெற்ற மும்பை நகராட்சி தேர்தலின்போது, அரசியலில் தீவிரமாகப் பங்கேற்கத் தொடங்கினார்.

பின்னர், 2002-ம் ஆண்டு மும்பை நகராட்சித் தேர்தலின் முழு பொறுப்பையும் பால் தாக்ரே, உத்தவ் தாக்ரேயிடம் வழங்கினார். அப்போது ராஜ் தாக்ரே ஆதரவாளர்களுக்கு வேட்பாளர்களாகப் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

அதற்கு பின்னரும், ராஜ் தாக்ரேவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர் அல்லது தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டனர்.

2003ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, சிவசேனவின் அடுத்த தலைவர் உத்தவ் தாக்ரேதான் என்பது தெளிவாக தெரிய தொடங்கியது.

உத்தவ் தாக்ரே காலத்தின் தொடக்கம்

2003ம் ஆண்டு ஜனவரி மாதம் சிவசேனை கட்சி பொதுக் குழுக் கூட்டம் மஹாபலேஷ்வரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் கடைசி நாளில், பால் தாக்ரே இல்லாத நாளில், சிவசேனையின் அடுத்த செயல் தலைவராக உத்தவ் தாக்கரேவை நியமிக்க ராஜ் தாக்கரே முன்மொழிந்தார்.

இதுவே, பால் தாக்கரேவின் அரசியல் வாரிசாக உத்தவ் இருப்பார் என்பதற்கான அதிகாரபூர்வ குறிப்பாக அமைந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உத்தவ் தாக்கரே

"மஹாபலேஷ்வரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் உத்தவ் தாக்ரே செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியில் தன்னை வளர விடமாட்டார்கள் என்று உணர்ந்த நாராயண் ரானே சிவசேனையில் இருந்து விலகினார். 2006ம் ஆண்டு சிவசேனையிலிருந்து விலகிய ராஜ் தாக்கரே மகாராஷ்டிர நவநிர்மான் சேனையை (எம்என்எஸ்) உருவாக்கினார்".

"சிவசேனை கட்சியில் இருந்து இந்த இரண்டு தலைவர்களும் பிரிந்து சென்ற பின்னர், மும்பை நகராட்சியில் அதிகாரத்தை தக்க வைத்துகொள்ளவும், சட்டமன்ற உறுப்பினர்களை ஒன்றாக வைத்திருக்கவும் உத்தவ் தாக்கரே போராட வேண்டியதாயிற்று. இதனை வெற்றிகரமாகவே செய்தார் உத்தவ் தாக்கரே. கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்பதை அவர் செயல்படுத்தியும் காட்டினார்." என்கிறார் குல்கர்னி.

சிறந்த அமைப்பாளர். ஆனால்...

"கட்சியை கட்டுக்கோப்பாக உறுதியாக நிர்வகித்தார் உத்தவ் தாக்ரே. அவர் சிறந்த அமைப்பாளர்.  எனவேதான், 2014ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, "மோதி அலை" வீசியபோதும், உத்தவ் தாக்ரே தலைமையில் சிவசேனை 63 தொகுதிகளில் வெல்ல முடிந்தது" என்கிறார் குல்கர்னி.

படத்தின் காப்புரிமை Getty Images

"ஆனால், கட்சி மீது உறுதியான பிடியை உத்தவ் தாக்கரே வைத்திருந்தபோதும், இவரது சமூக-அரசியல் புரிதலில் ஆழம் இல்லை. எந்தவொரு பிரச்சனையையும் இவர் ஆழமாக அலசி ஆராய்வதாகத் தெரியவில்லை.

இவரது நடத்தையும் வெளிப்படையாக இல்லை. சில பிரச்சனைகளில் கருத்துக்களை தெரிவித்தாலும், ஊடகங்களுக்கு தலைப்பு செய்திகளை இவரால் வழங்க முடியவில்லை. இவர் கூறுகின்ற சில பிரச்சனைகளின் உள்ளடக்கம் வலுவாக இருப்பதில்லை" என்று மூத்த பத்திரிகையாளர் விஜய் சோர்மரே தெரிவிக்கிறார்,

காங்கிரஸ் தலைவர் ஒருவரைப் போன்ற பிம்பம்

உத்தவ் தாக்ரேயின் தலைமைப் பண்பு பற்றி குறிப்பிடுகையில், தவால் குல்கர்னி, "காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கொண்டிருக்கும் ஆளுமைக்கு மிகவும் நெருக்கமானது உத்தவ் தாக்ரேயின் ஆளுமை. "சிவசக்தி - பீம்சக்தி"யை உருவாக்குவதன் மூலம் கூட்டணி அரசியலை நடைமுறைப்படுத்தி, 'மி மும்பைக்கார்' போன்ற பரப்புரைகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

ஆனால், ராஜ் தாக்கரே போல இவரது ஆளுமை ஆக்ரோஷமானது அல்ல. என்றாலும், சிவசேனையும், மகாராஷ்டிர நவநிர்மான் சேனையும் இதற்கு முன்னால் கையாளாத விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் தொழிலாளர் பிரச்சனைகளை உத்தவ் தாக்ரே கையாண்டார்" என்று குல்கர்னி குறிப்பிடுகிறார்.

"ஒரு தலைவராக உத்தவ் தாக்ரேவை சாதாரண மனிதரால் எளிதாக அணுக முடியவில்லை. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி போல உத்தவ் தாக்ரேவை யாராவது சந்திக்க வேண்டுமானால், நடுவில் இருந்து ஏற்பாடு செய்யும் சிலர் வழியாகத்தான் செல்ல வேண்டும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் விஜய் சோர்மரே.

தலைவர் உத்தவ் இப்படி என்றால், முதல்வர் உத்தவ் எப்படி இருப்பார். தம்மை முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இப்படிக் கூறினார் உத்தவ் தாக்கரே: "நான் மட்டும் முதல்வரல்ல. இங்குள்ள நீங்கள் அனைவருமே முதல்வர்கள்தான்". இதை நடைமுறையிலும் கடைபிடித்து, எளிதாக அணுக முடியாதவர் என்ற பிம்பத்தை உடைத்து, ஜனநாயக விழுமியத்தை காப்பாரா உத்தவ்? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: