கண்சிமிட்டலால் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிரியா வாரியருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

இதை பகிர Email இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர வாட்ஸ்அப்

'ஒரு அடார் லவ்' என்ற மலையாள திரைப்படத்தில் நடிகை பிரியா வாரியர் கதாநாயகனை பார்த்து கண் சிமிட்டும் காட்சி, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதாக ஒரு முஸ்லிம் குழு தொடுத்த வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் 'ஒரு அடார் லவ்' என்ற மலையாள திரைப்படத்தின் 'மாணிக்க மலராய பூவி' என்ற பாடல் யு டியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டது.

பதின்ம வயது காதலை மையப்படுத்தும் இப்படத்தில், பிரியா வாரியர், குறும்பாக கண் சிமிட்டும் காட்சியால் பாடல் மிகவும் வைரலானது.

நபிகள் நாயகத்தின் மனைவியை குறிக்கும் இந்த புனிதமான பாடலில், கண்சிமிட்டி குறும்பாக பிரியா வாரியர் சிரிக்கும் காட்சி, மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் என்று வழக்கு தொடுத்தவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

அவர்கள் இந்த பாடலை தவறாக புரிந்து கொண்டதாக பிரியா வாரியர் தெரிவித்தார்.

Image copyright Instagram

இந்த பாடல் திரைப்படத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று பிரியா வாரியர், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது இக்குழுவால் புகார் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதை எதிர்த்து, பிரியா வாரியர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பிரியா வாரியர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில், ''ஒரு திரைப்படத்தில் யாரோ ஒரு பாடலை பாடியிருக்க, உங்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லையா? இந்த வழக்கை பதிவு செய்துள்ளீர்கள்! '' என்று வினவினார்.

ஒமர் லூலு இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 'ஒரு அடார் லவ்' படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

'மாணிக்க மலராய பூவி' பாடல் வெளியான சில நிமிடங்களிலே மிகவும் வைரலாகி பல லட்சம் பேர் அதை பகிர்ந்தனர்.

பிரியா வாரியர் பள்ளி மாணவியாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் வெளியீடு, வழக்கு காரணமாக தாமதமானது. செப்டம்பர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :