கருணாநிதி மறைவு : அழகிரியின் அடுத்த திட்டம் என்ன?

இதை பகிர Email இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர வாட்ஸ்அப்

Image copyright GETTY IMAGES

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் மூத்த மகனும் கருணாநிதியின் காலத்திலேயே கட்சியைவிட்டு நீக்கப்பட்டவருமான மு.க. அழகிரி, கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று சொல்லியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சியில் நெருடலான மனிதராகவே இருந்த அழகிரி என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறார்?

2007ஆண்டு மே மாதம். முதலமைச்சர் மு. கருணாநிதியின் சட்டமன்றப் பொன் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இருந்த தருணம். அப்போது தினகரன் நாளிதழில் மக்கள் மனசு என்ற பெயரில் ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. அந்தக் கருத்துக் கணிப்பில் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு மு.க. ஸ்டாலினுக்கு 70 சதவீத ஆதரவு இருப்பதாகவும் மற்றவர்களுக்கு 20 சதவீத ஆதரவு இருப்பதாகவும் மு.க. அழகிரிக்கு இரண்டு சதவீத ஆதரவு இருப்பதாகவும் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்தக் கருத்துக் கணிப்பு மு.க. அழகிரிக்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரது ஆதரவாளர்கள் முதலில் தினகரன் நாளிதழைக் கொளுத்தினர். அதற்குப் பிறகு மதுரை புறநகர்ப் பகுதியில் உள்ள தினகரன் அலுவலகத்தை தீ வைத்து எரித்தனர். இதில் சிக்கி தினகரனில் பணியாற்றிய 3 ஊழியர்கள் உயிரிழந்தார்கள். கருணாநிதியின் சட்டமன்றப் பொன்விழா ஏற்பாடுகளில் இருந்த தி.மு.கவுக்கு இது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

Image copyright HINDUSTAN TIMES

இந்த சர்ச்சையின் துவக்கப் புள்ளி தயாநிதி மாறன்தான் என்றாலும், மூன்று உயிர்கள் பலியாகும் அளவுக்கு தாக்குதல் நடத்தியதால் அழகிரியும் தி.மு.கவும் கடும் விமர்சனத்திற்குள்ளானார்கள்.

ஆனால், தி.மு.கவுக்கும் கருணாநிதிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது என்பது அழகிரிக்கு புதிதல்ல. 2003ஆம் ஆண்டு மே மாதம் தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மு.க. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்பட்ட தா. கிருட்டிணன் மதுரையில் வெட்டிக்கொல்லப்பட்டார். அந்த கொலைவழக்கில் மு.க. அழகிரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அழகிரி, மதுரையின் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அழகிரி கைதுசெய்யப்பட்டபோது மு.க. ஸ்டாலின் அதனைக் கண்டித்தார்.

மதுரையும் மு.க. அழகிரியும்

சென்னையில் வசித்துவந்த மு.க. அழகிரி தி.மு.கவின் கட்சி நாளிதழான முரசொலியின் மதுரைப் பதிப்பை நிர்வகிக்க 1980களில் மதுரைக்கு இடம்பெயர்ந்தார். ஆனால், கட்சிப் பதவி ஏதும் அவருக்கு வழங்கப்படவில்லை. 1996ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்குவந்தபோது, மதுரையின் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக மு.க. அழகிரி உருவெடுக்க ஆரம்பித்தார். அந்த காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் முக்கியத் தலைவர்களாக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், தா. கிருட்டிணன் உள்ளிட்டவர்கள் மு.க. அழகிரியின் செயல்பாட்டை ஏற்கவில்லை.

2001 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரனும் வி. கருப்பசாமி பாண்டியனும் தி.மு.கவில் இணைந்தனர். இது கட்சிக்கு தென் மாவட்டங்களில் புதிய வலுவைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களது வருகையை மு.க. அழகிரி விரும்பவில்லை. இதையடுத்து, தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரையும் ராஜினாமா செய்யச் சொன்னார் அழகிரி. அப்போதும்கூட அவர் கட்சியில் இல்லை.

மு.க. அழகிரியின் விமர்சனத்திற்குரிய செயல்பாடுகள் குறித்து கட்சித் தலைவர் கருணாநிதியிடம் கேட்டபோது, "மு.க. அழகிரி கட்சியிலா இருக்கிறார்? அவர் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?" எனக் கேள்வியெழுப்பினார்.

Image copyright Getty Images

அந்தத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தலைவர்கள் மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தனர். அழகிரிக்கு ஆதரவான நிர்வாகிகள் தி.மு.கவுக்கு எதிராகப் பணியாற்றியதே தோல்விக்குக் காரணம் என கூறப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கட்சி நிர்வாகிகள் யாரும் மு.க. அழகிரியுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து அழகிரியின் ஆதரவாளர்கள் பேருந்துகளைக் கொளுத்த, மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர் வேலுசாமியின் பதவி பறிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, அழகிரி சற்று அடக்கிவாசிக்க ஆரம்பித்தார்.

மு.க. அழகிரியின் எழுச்சியும் , வீழ்ச்சியும்

2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண்டிப்பட்டித் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக மு.க. அழகிரி ஆற்றிய கடுமையான பணிகள் அவரை மீண்டும் கட்சிக்கு நெருக்கமாக்கின. அதே மாதம் கருணாநிதியின் தொல்காப்பியப் பூங்கா புத்தகத்தின் இரண்டாவது பதிப்பை மதுரையில் வெளியிட்டு, 28 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துகாட்டினார் அழகிரி.

2009ல் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் மு.க. அழகிரியின் செயல்பாடுகள் பலராலும் கவனிக்கப்பட்டது. வாக்குகளுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் அந்த இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றி, அழகிரியின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது.

2008ஆம் ஆண்டில் தா. கிருட்டிணன் கொலைவழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அழகிரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.

Image copyright Getty Images

2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 2 ஜி ஊழல், இலங்கைப் பிரச்சனையில் சரியாக செயல்படாதது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டபோதும் 27 தொகுதிகளில் வெற்றிபெற்றது. குறிப்பாக அழகிரியின் கட்டுப்பாட்டில் இருந்த தென்மாவட்டங்களில் தென்காசி தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியது.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக அந்தத் தேர்தலில்தான் வெற்றிபெற்றது. அதற்குப் பிறகு தென் மாவட்டத் தி.மு.கவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்க ஆரம்பித்தார் அழகிரி.

ஆனால், 2013ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியபோது அழகிரி அதில் அதிருப்தியடைந்ததாகக் கூறப்பட்டது.

அழகிரி குறித்து என்ன சொன்னார் கருணாநிதி?

இதற்குப் பிறகு, 2014ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்தே மீண்டும் அழகிரிக்கும் ஸ்டாலிக்கும் எதிரான உரசல்கள் வெளிப்படையாகத் தென்பட ஆரம்பித்தன. 2014ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள கட்சி அமைப்புகளை கலைத்து கருணாநிதி உத்தரவிட்டார். இதற்குப் பிறகு, தி.மு.க. - தே.மு.தி.க கூட்டணி குறித்து அழகிரி தெரிவித்த கருத்தை மு. கருணாநிதி கடுமையாக கண்டித்தார்.

பிரச்சனைகள் முற்றிய நிலையில், அழகிரி மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பொதுச் செயலாளர் க. அன்பழகன், அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஜனவரி 24ஆம் தேதியன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த மு.க. அழகிரி அவரிடம் சண்டை பிடித்தார். இதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, "24ஆம் தேதி விடியற்காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றிப் புகார்கூறி, விரும்பத்தகாத வெறுக்கத்தக்க வார்த்தைகளையெல்லாம் மளமளவெனப் பேசி, என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும் இதயம் நின்று விடக்கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று - நான்கு மாதங்களுக்குள் செத்துவிடுவார் என உரத்த குரலிலே என்னிடத்தில் சொன்னார். எந்தத் தகப்பனாராவது இதுபோன்ற வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ள முடியுமென்று யாரும் கருத முடியாது" என்று குறிப்பிட்டார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி

கருணாநிதியின் இந்தப் பேட்டி தி.மு.கவில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு மார்ச் 25ஆம் தேதி அழகிரி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். ஆனால், இதற்குப் பிறகும் சட்டமன்றத் தேர்தல் தருணத்தில் தி.மு.கவின் வெற்றி குறித்து எதிர்மறையான கருத்துக்களை அழகிரி தெரிவித்து கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்குப் பிறகு, மு.க. ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையில் வெளிப்படையான மோதல் நடக்கவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட தருணத்தில் அவர் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி மூத்த மகனான மு.க. அழகிரியிடம் கொடுக்கப்படாமல் மு.க. ஸ்டாலினிடமே வழங்கப்பட்டது.

இந்த நிலையில்தான் திங்கட்கிழமையன்று கருணாநிதியின் சமாதியில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் தன் பக்கமே இருப்பதாக கூறினார்.

கட்சியைவிட்டு நீக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், மு.க. அழகிரி என்ன செய்ய விரும்புகிறார் என்பது யாருக்கும் தெளிவில்லாமல் இருக்கிறது. மு.க. அழகிரியின் ஆதரவாளரும் தா. கிருட்டிணன் வழக்கில் அவருடன் சேர்ந்து குற்றம்சாட்டப்பட்டவருமான ஒருவரிடம் பிபிசி பேசியபோது, தாங்கள் தி.மு.கவுக்கு எதிராகச் செயல்படப்போவதில்லை; எங்களையும் அரவணைத்துச் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்று கூறினார்.

தற்போது சென்னையில் தங்கியுள்ள மு.க. அழகிரி ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று மதுரை திரும்பவிருக்கிறார். இதற்குப் பிறகு மதுரையில் தன் ஆதரவாளர்களை வைத்து கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

"தி.மு.கவுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம். ஆனால், கலைஞர் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தலாமா என்ற எண்ணம் இருக்கிறது. அழகிரி இல்லாமல் மதுரையில் கட்சியே செயலிழந்துவிட்டது. பாருங்கள், தலைவர் மறைவையொட்டி ஒரு அஞ்சலிக் கூட்டம்கூட நடத்தப்படவில்லை" என்கிறார் தி.மு.கவின் முன்னாள் மதுரை மாவட்ட அவைத் தலைவரான கே. இசக்கிமுத்து.

தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்த காலகட்டத்தில், மு.க. ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை அளித்தபோதும் துணை முதல்வர் பதவியை அளித்தபோதும் அழகிரியிடம் சொல்லிவிட்டே அதைச் செய்தார் என்கிறார் இசக்கிமுத்து.

Image copyright FACEBOOK/MK STALIN

ஆனால், கருணாநிதிதானே மு.க. அழகிரியை கட்சியைவிட்டு நீக்கினார் என்ற கேள்விக்கு, மு. கருணாநிதியின் முதுமையைப் பயன்படுத்தி மு.க. ஸ்டாலின் செயல்பட்டார் என்று குற்றம்சாட்டுகிறார்.

50 ஆண்டுகாலம் தலைவராக இருந்த மு. கருணாநிதி மறைந்துவிட்ட நிலையில், தி.மு.க. முழுக்கவும் செயல்தலைவரான மு.க. ஸ்டாலினின் பின்னால் நிற்கிறது. இந்த நிலையில் மு.க. அழகிரி என்ன செய்ய நினைக்கிறார். "ஒன்றுமில்லை. கட்சித் தலைவராவதற்கு அண்ணணின் ஆதரவைக் கேட்டிருந்தால் அவரே மு.க. ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருந்திருப்பார். அதுபோன்ற ஒரு நடவடிக்கையைத்தான் எதிர்பார்க்கிறோம்" என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத அழகிரி ஆதரவாளர் ஒருவர்.

வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி தி.மு.கவின் பொதுக் குழு கூட்டப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொதுக் குழுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் முழுமையான தலைவராக அறிவிக்கப்படக்கூடும். அதற்குப் பிறகு, மு.க. அழகிரி என்ன செய்ய முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.

1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கருணாநிதியின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு திருக்குவளையில் மூத்த மகனாகப் பிறந்த மு.க. அழகிரி, 80களில் மதுரையில் வந்து குடியேறினார். தென் மண்டல அமைப்புச் செயலாளர், மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :