''கேரள நதிகள் சிந்துவது வெள்ளம் அல்ல கண்ணீர்'': தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்

இதை பகிர Email இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர வாட்ஸ்அப்

''கேரளாவில் பாய்வது வெள்ளநீர் மட்டுமல்ல. அங்குள்ள 44 நதிகளும் சிந்தும் கண்ணீர்,'' என்கிறார் இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று அறியப்படும் ராஜஸ்தானை சேர்ந்த ராஜேந்திர சிங்.

Image copyright Getty Images
Image caption ராஜேந்திர சிங்

94 ஆண்டுகளுக்குப் பின்னர் கேரளா சந்தித்துள்ள பெருவெள்ளம் 60க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் குடித்துள்ளது என்பது ஒவ்வொருவரின் அலட்சியப்போக்கை காட்டுகிறது என்று வேதனையோடு பேசுகிறார் ராஜேந்திர சிங்.

''கேரளா அரசு என்னை மறந்துவிட்டது''

ராமேன் மக்சேசே விருதும், தண்ணீருக்கான நோபல் பரிசையும் பெற்றுள்ள ஆளுமையான ராஜேந்திர சிங், கேராளவில் உள்ள நதிகளை மீட்பது குறித்தும் கேரள மாநிலத்தின் நதிநீர் வளத்தை பயனுள்ள வகையில் சேமிப்பது குறித்தும் ஒரு திட்டத்தை வகுக்க 2015ல் அழைக்கப்பட்டார்.

''என்னை மறந்துவிட்டார்கள் போலும். கேரளாவின் முக்கிய அமைச்சர்கள்,அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் நதிநீர் வளத்தை சேமிப்பது, வெள்ளத்தை தடுப்பது என பல விசயங்கள் பேசப்பட்டன. இதற்கு முக்கியமாக கேரளாவின் நதிநீர் பாதுகாப்பு மசோதா ஒன்று கொண்டுவரவேண்டும் என்று முடிவானது. என்னிடம் கருத்து கேட்டார்கள். நானும் பலவிதமான ஆலோசனைகள் செய்து, மொத்தமுள்ள 44 நதிகளின் வளத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறித்து வரைவு மசோதாவில் கொண்டுவர வேண்டிய அழுத்தமான சட்டப்பிரிவுகளை பட்டியலிட்டு அனுப்பினேன்,'' என்று கூறிய ராஜேந்திர சிங் கேரளா அரசுக்காக தயார் செய்த வரைவு மசோதாவை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

வளம் கொழிக்கும் நதிகளை பாதுகாக்கவில்லை

முதலில் கேரளாவில் உள்ள ஒவ்வொரு நதியின் தன்மைக்கு ஏற்ப அந்த நதியின் வழிகளை தடுக்கும் கட்டுமானங்களையும்,ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும் என்று கூறிய அவர், ''எல்லா நதியிலும் தண்ணீர் இருந்தாலும், ஒவ்வொரு நதியின் குணமும் வேறுபட்டது. ஒரே மாதிரி ஒழுங்கு நடவடிக்கைகளை எல்லா நதிகளுக்கும் பொருந்தாது. 44 நதிகள் மீதுள்ள ஆக்கிரமிப்புகள் என்னென்ன என்று முறைப்படி வரிசைப்படுத்தி, ஒவ்வொரு நதிக்கு அருகிலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்கவேண்டும். நதிநீரை மாசுபடுத்தும் தொழிற்சாலை,குடியிருப்புகளை அகற்றுவது என படிப்படியாக வேலை செய்யவேண்டும் என்று தெரிவித்திருந்தேன். முக்கியமாக பல இடங்களில் வன அழிப்பு மற்றும் மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. கடுமையான நடவடிக்கையை தாமதித்தால் பாதிப்பை எதிர்கொள்ளத்தான் வேண்டும்,'' என்கிறார் ராஜேந்திர சிங்.

கேரளாவில் உள்ளது போல 44 நதிகள், ஏன் அதில் பாதியளவு நதிகள் ராஜஸ்தானில் இருந்தால், இந்தியாவிலேயே அதிக வளம் கொழிக்கும் மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் ராஜஸ்தான் இருக்கும் என்கிறார் அவர்.

''வளம் கொழிக்கும் நதிகளை தற்போது மீளமுடியாத வெள்ளபாதிப்பு ஏற்படுத்தும் நதியாக நாம் மாற்றிவிட்டோம். இந்த நிலை தொடர்ந்தால் கேரளாவில் வறட்சியும், வெள்ளமும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். நதி அதன் வழியில் பாய்வதை நாம் தடுக்கமுடியாது,'' என்று கூறுகிறார் ராஜேந்திர சிங்.

Image caption கொச்சி விமான நிலையம்

கேரளாவில் வெள்ளம் வடிந்ததும், மீண்டும் ஒரு முறை கேரளா அரசுக்கு உதவ தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் தலையீடு அதிகம்

தண்ணீர் மனிதரின் வரைவு மசோதாவை அடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து கேரளா நீர் மேலாண்மை சிறப்புக்குழுவைச் சேர்ந்த அதிகாரி ஜேம்ஸ் வில்சனிடம் கேட்டோம்.

''தற்போது வரலாறு காணாத வெள்ளத்தில் இருக்கிறோம். திட்டங்கள் பற்றி பேசுவது தற்போது சரியானது அல்ல. ஆமாம் ராஜேந்திர சிங் வந்தார். வரைவு மசோதாவுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் நாம் கொண்டுவரும் எல்லா யோசனைகளையும் களத்தில் செயல்படுத்துவது முடியாத காரியம் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்,'' என்று கூறுகிறார் ஜேம்ஸ்.

பேரிடரை தவிர்க்க முடியாது

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசியல் தலையீடு இருப்பது குறித்து பேசிய அதிகாரி ஜேம்ஸ், ''கேராளவைப் பொருத்தவரை இங்கு நிலம் குறைவு. இங்குள்ள மக்கள் காலங்கலாமாக நதிக்கரையில் வாழுந்துவருகிறார்கள். பல இடங்களில் வீடுகளுக்கு அருகில் நதி பாய்ந்தோடும் நிலை உள்ளது. மக்களை அகற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை. அரசியல் கட்சிகள் பலரும் உடனே ஆதரவுக்கு அழைக்கப்படுவார்கள். மக்கள் போராடத்தொடங்கிவிடுவார்கள். பாரம்பரியமாக வாழ்ந்துவரும் மக்களை உடனடியாக அகற்றுவது முறையான செயலாக இருக்காது. பல இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம் இது,'' என்று வெளிப்படியாக பேசினார் ஜேம்ஸ்.

கேரளாவில் அதிகரித்துவரும் ஜனத்தொகையும், கட்டுமானங்களும் மேலும் நிலபரப்பை சுருக்குவதாக கூறும் ஜேம்ஸ், ''ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் வெள்ளம் வரும். இந்த ஆண்டு நடந்தது பேரிடர். 1924ல் நடந்த வெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். எந்த அளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் எடுத்தாலும் ஒரு 50ஆண்டுகள் அல்லது 100ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பேரிடர்களை நாம் தவிர்க்க முடியாது. நதிகளை பாதுகாக்க வேண்டும், மீட்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம். வெள்ளம் வடிந்ததும், நிச்சயமாக பரிசீலிப்போம்,'' என்று நம்பிக்கையான வார்த்தைகளுடன் தனது உரையாடலை முடித்துக்கொண்டார் ஜேம்ஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :