பெட்ரோல், டீசல்: "மாநில அரசு வரி குறைப்பது சாத்தியமில்லை" - எடப்பாடி பழனிசாமி

இதை பகிர Email இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர வாட்ஸ்அப்

கர்நாடக அரசு காவிரியில் அணைகட்டினால் சட்டரீதியாக சந்திப்போம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சேலம் வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Image copyright Getty Images

அப்போது, "தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியபோது குடிநீருக்குகூட கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. இந்த நிலையில் காவிரியில் மேலும் ஒரு அணை கட்டினால் தமிழகம் கடுமையாக பாதிக்கும். எனவே அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம், தமிழக அரசு இதில் உறுதியான நிலைபாட்டில் உள்ளது. இதனை சட்ட ரீதியாக சந்திப்போம்," என்றார்.

"தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. குற்றச்சாட்டு கூறினால் குற்றவாளி ஆகிவிட முடியாது. தற்போதைய ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். எந்த துறையிலும் தவறு நடப்பதாக தனக்கு தெரியவரவில்லை."

"அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டாலும் குற்றம் நிரூபிக்கபட்டால் மட்டுமே குற்றவாளி, தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்," என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கு யார் நிதி அளிக்கிறார்களோ அவர்களுக்கு துணையாக இருக்கும் வகையில் வரும் தேர்தலில் எங்கள் செயல்பாடு இருக்கும்," என்றார்.

தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க செயல்படுவதாக தம்பிதுரை கூறிய குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த முதலமைச்சர், அது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.

Image copyright Getty Images

மேலும், "பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் உயர்த்துகிறது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசே குறைப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். மாநில அரசு வரியை குறைப்பது என்பது தற்போதைய நிதிச்சுமையில் சாத்தியமில்லை," என்றார்.

2011ல் விலையைக் குறைத்த மாநில அரசு

2011-ம் ஆண்டு பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்தபோது, அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி பெட்ரோல் விலையைக் குறைப்பதற்கான மாநில அரசின் முயற்சியாக பெட்ரோல் மீதான மாநில விற்பனை வரியை 30 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாகக் குறைத்தார். இதனால் அப்போது ரூ.63.37 ஆக இருந்த லிட்டர் பெட்ரோலின் விலையில் ரூ.1.38 குறைந்தது. இதனால், மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.210 கோடி இழப்பு ஏற்படும் என்று அப்போது அறிவித்தார் கருணாநிதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :