கணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும்

இதை பகிர Email இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர வாட்ஸ்அப்

கணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும்.

Image copyright Reuters

எதிர்வரும் நாட்களில் ஆஸ்திரேலிய குழந்தைகள், பள்ளியில் கணிதம், அறிவியல் வரலாறு போன்ற பாடங்களோடு மரணம், இறப்பு போன்றவற்றையும் ஒரு பாடமாக படிப்பார்கள்.

இதுதொடர்பான முன்மொழிவை ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லெண்ட் மெடிக்கல் அசோஸியேஷன் அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

பள்ளிக் கல்வியில், பிறப்பு, கணிதம், அறிவியல், உடற்கூறு என பல்வேறு பாடங்கள் கற்பிப்பது போலவே வாழ்க்கையின் முடிவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், அதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும் என அந்த அமைப்பு கூறுகிறது.

மேம்பட்ட சிறந்த மருத்துவ முறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மக்களின் வாழ்நாள் அதிகரிப்பது மகிழ்ச்சியளிப்பது ஒரு புறம் என்றால், முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குடும்பங்களிடையே பலவித சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் ரிச்சார்ட் ரீட் கூறுகிறார், "பள்ளியில் பாடங்கள் கற்றுக் கொடுப்பது அவர்களின் வாழ்க்கையில் பயன்படுத்துவதற்காகத்தான். தங்கள் பெற்றோர் மற்றும் வாழ்வின் அந்திமக் காலத்தில் இருக்கும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களை இயல்பாக நடத்துவது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளியில் பாடமாக கற்றுக் கொள்வது அவர்களின் வாழ்க்கைக்கு உதவும்."

Image caption பெற்றோர் மற்றும் முதியவர்களை இயல்பாக நடத்துவது பற்றி இளைஞர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் ரிச்சார்ட் ரீட்

"தற்போது, சிறுவர்களுக்கு மரணத்தைப் பற்றி தெரிந்திருப்பது தேவையில்லை என்ற மனப்போக்கு நிலவுகிறது. எனவே, இளைஞர்கள் இதுபோன்ற சிக்கல் நிறைந்த விஷயங்களைப் பற்றி பேச முடியாத சூழல் நிலவுகிறது. சிறுவர்களுக்கு இதுபற்றிய தகவல்கள் தெரியவேண்டாம் என்பது போன்ற மனத்தடைகளால், அவர்களது நெருங்கிய உறவினர்களின் மரணம் மருத்துவமனைகளில் நிகழ்கிறது."

"இதுபோன்ற வாழ்வியல் சூழல்களை சிறுவயதில் இருந்தே இயல்பாக எதிர்கொள்ளும் வகையில் பள்ளிகளில் மரணம் என்றால் என்ன என்பது போன்ற பாடங்களை கற்பிக்கலாம் என்று பல்வேறு கோணங்களில் ஆலோசித்து அதன் முடிவை அரசின் முன் வைத்திருக்கிறோம்."

வாழ்க்கையின் இறுதித் தருணம்

மரணம் தொடர்பான சட்டங்கள், தார்மீக கடமைகள், தவிர்க்க வேண்டியவை, கருணைக் கொலை, விருப்ப மரணம் போன்றவற்றை வகுப்பறையில் பாடங்களாக நடத்தும்போது, அவர்களுக்கு மரணம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்படும். அதோடு, வாழ்க்கையில் யாரும் தவிர்த்திட முடியாதது மரணம் என்ற விழிப்புணர்வு மாணவப் பருவத்திலேயே ஏற்படுவதால், அது இளைஞர்களின் மனோபாவத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது ஆஸ்திரேலிய மருத்துவர்கள் முன்வைக்கும் வாதம்.

வாழ்க்கையின் இறுதித் தருணத்தில் முடிவு எடுப்பதில் மாணவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்துவதில், மரணம் தொடர்பான பாடம் உதவியாக இருக்கும் என்கிறார் டாக்டர் ரிச்சர்ட்.

Image copyright DALE DE LA REY/AFP/Getty Images

சிறுவயதிலேயே மரணம் பற்றிய புரிதல்கள் ஏற்பட்டுவிட்டால், பெரியவர்களாகும்போது தங்கள் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் செய்ய வேண்டியவை என்ன என்பதை தெரிந்துக் கொள்வதோடு, மரணத்தை இயல்பானதாக பாவிப்பது எப்படி போன்ற விழிப்புணர்வு ஏற்படும்.

அதுமட்டுமல்ல, நோய்வாய்ப்பட்ட குடும்பத்தினருக்கோ அல்லது உறவினர்களுக்கோ எந்தவிதமான சிகிச்சைகளை கொடுக்கலாம் என்பது போன்ற முடிவுகள் எடுப்பதையும் மரணம் பற்றிய பாடம் எளிதாக்கும்.

"21 வயது இளைஞர்கள்கூட இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுப்பதற்கு சிரமப்படுவதை பார்த்திருக்கிறேன்" என்கிறார் டாக்டர் ரிச்சர்ட்.

"தங்கள் அன்புக்குரியவர்களின் நலனுக்காக என்ன செய்வது, சட்டத்தில் அதற்கு இடமிருக்கிறதா என்பது போன்ற தகவல்கள் உயர் கல்வி பயின்றவர்களுக்குக்கூட தெரிவதில்லை" என்கிறார் டாக்டர் ரிச்சர்ட்.

மரணம் பற்றி பேசுவதை தவிர்க்கும் மனோபாவம், சரியான நேரத்தில் முடிவு எடுக்கத் தெரியாமல் திண்டாட வைக்கிறது. இதனால் முடிவெடுப்பதில் கால தாமதமும், வேறு பல சிக்கல்களும் ஏற்படுகிறது.

அதேபோல் குடும்பத்தின் பெரியவர்களுக்கு நோய்கள் ஏற்படும்போது எதுபோன்ற சிகிச்சை அளிக்கவேண்டும், வயதானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கு ஏற்படும் நோய்கள், மன சிக்கல்கள் போன்றவற்றை இளைஞர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

எனவே, இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ள இளைஞர்களை தயார்படுத்துவது காலத்தின் கட்டாயம். அதுவும் மருத்துவத் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகள், நவீன சிகிச்சை மற்றும் தொழில்நுட்பங்களின் காரணமாக முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இதுபற்றி பேசப்படுவதும், அவை சரியான தளத்தில் புரிந்துக் கொள்ளப்படுவதும் அவசியம்.

மரணம் என்பதை கல்வியில் பாடமாக வைக்கும்போது, அதில் மரணத்துடன் தொடர்புடைய சட்ட அம்சங்கள், கருணைக்கொலை, வயதானவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள், எதிர்காலத்தில் சிகிச்சைகள் வழங்குவதற்கான சாத்தியங்கள், அது தொடர்பான விழிப்புணர்வு, மரணம் நிகழும் முறை போன்றவற்றை பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்.

கலாசாரத்தின் பங்கு

மேலே குறிப்பிடப்பட்ட தலைப்புகள் அனைத்தும் உயிரியல், மருத்துவம், சட்டம் மற்றும் தத்துவம் போன்ற பாடங்களின் ஒரு பகுதியாகவும் கற்பிக்கப்படலாம்.

மரணம் பற்றிய பாடங்கள் பள்ளிக்கல்வியில் சேர்க்கப்பட்டால், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் மெக்சிகோவின் அடிச்சுவடுகளை பின்பற்றும் நாடுகளாகும் என்று சொல்கிறார் டாக்டர் கிட்.

Image copyright Nina Raingold/Getty Images
Image caption மரணத்திற்கு கலாசார ரீதியாக முக்கியத்துவம் கொடுக்கும் மெக்சிகோவில் கொண்டாடப்படும் மரணத் திருவிழா

மரணத்திற்கு கலாசார ரீதியாக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு மெக்சிகோ. அங்கு மரணம் கொண்டாடப்படுகிறது. மரணத்தை கொண்டாடும் வகையில் அங்கு மரணத் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

அதேபோல் அயர்லாந்திலும் மரணம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மரணத்தைப் பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்தால், மரணம் என்பது சுமையாக இல்லாமல் இயல்பானதாக தோன்ற ஆரம்பிக்கும். அது மனிதர்களின் மனதில் இறுதிக்காலத்தைப் பற்றிய சிக்கலான சிந்தனைகளை எளிமைப்படுத்தும்.

ஆஸ்திரேலிய மக்களில் பெரும்பான்மையானவர்களின் மரணம் மருத்துவமனைகளில் நிகழ்கிறது. ஆனால், இறக்கும்போது வீட்டில் இருப்பதையே மக்கள் விரும்புகின்றனர்.

இறப்பை இயல்பானதாக நினைக்கத் தொடங்கிவிட்டால், அது தொடர்பான திட்டங்கள், இறக்க விரும்பும் இடங்களை தேர்ந்தெடுப்பது போன்றவற்றை நோக்கி மனிதர்களை இட்டுச் செல்லும்.

"15% மக்களே தங்களின் இறுதிக் கணங்களை தங்கள் வீட்டில் கழிக்கின்றனர். ஆனால் பெருமளவிலான மக்களின் மரணம் மருத்துவமனையில் சற்று சங்கடமான மனோநிலையிலேயே நிகழ்கிறது" என்கிறார் டாக்டர் கிட்.

Image copyright ROBERT CIANFLONE/GETTY IMAGES

வாழ்வுக்கும் சாவுக்குமான சவால்கள்

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாக மரணம் என்பது வீடுகளில் நிகழ்வது இயல்பானதாக இருந்தது. ஆனால் நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமானபிறகு, மனிதர்களின் ஆயுள் அதிகரிக்கத் தொடங்கியது. மிகவும் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் மருத்துவ உபகரணங்களின் உதவியால் சிகிச்சை பெறுகின்றனர்.

சில நேரங்களில் மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காமல் மரணம் ஏற்படுகிறது. பல நேரங்களில் மாதக்கணக்காக உபகரணங்களின் உதவியால் ஆயுளை நீட்டித்தாலும் பயன் ஏதும் ஏற்படாமல் போகிறது.

குறிப்பிட்ட காலம் சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு, நோய் குணமாகாத நிலையில் இறுதிக் கணங்களை வீட்டில் கழிக்கலாமென்று நோயாளிகள் விரும்பினாலும், அது பற்றி முடிவெடுப்பதில் குடும்ப உறுப்பினர்கள் தடுமாறுகின்றனர்.

மரணம் என்பது பாடமாக கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டால், எந்த நோய்க்கு எத்தனைக் காலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாம் என்பது பற்றியும், வீட்டில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டிய நோய்கள் எவை என்பது குறித்தும் இளம் வயதிலேயே புரிதல் ஏற்படும்.

Image copyright Getty Images
Image caption இறுதிக்கணங்களை எப்படி வாழவேண்டும் என்று முடிவெடுப்பது ஒருவரின் உரிமை என்பதை குடும்பத்தினர் புரிந்துக்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

மரணத்தை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்த குவின்ஸ்லெண்ட் மெடிக்கல் அசோஸியேஷனின் முன்மொழிவு, ஆஸ்திரேலியா கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த செய்தி உலகின் பிற நாடுகளையும் இதுபற்றி சிந்திக்கவைக்கும் என்று டாக்டர் கிட் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பேசும்போது இதுபோன்ற விஷயங்கள் இயல்பாக பேசப்படவேண்டும். இப்படி சொல்வது எளிதானதாக இருந்தாலும், உண்மையில் சிரமமானதுதான். ஆனால் வாழ்வா சாவா என்ற சவாலை எளிதாக எதிர்கொள்ள மரணம் பற்றிய கல்வி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Image caption முதியோர் காப்பகத்தில் மழலையர் பள்ளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: