கிரிக்கெட்: தொடரும் தோல்வி: 'பயிற்சியாளரை மாற்றுங்கள்' - ரசிகர்கள் போர்க்கொடி

இதை பகிர Email இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர வாட்ஸ்அப்

Image copyright Reuters

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய கிரிக்கெட் அணி, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 0-2 என்ற நிலையில் தொடரில் பின்தங்கி உள்ளது.

தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன், ''டெஸ்ட் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தில் இருக்கலாம். ஆனால், தற்போதைய நிலையில், இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெறும் இந்த டெஸ்ட் தொடர் ஆண்களுக்கும், சிறுவர்களுக்கும் (Men versus Boys) இடையே நடைபெறும் தொடர் போல் உள்ளது'' என்று கூறியுள்ளார்.

''இந்த சூழலில் இங்கிலாந்து அணியே சிறந்த அணியாக விளங்குகிறது. இந்த தொடரில் சில தருணங்களில் இந்தியா நன்றாக விளையாடினாலும், இங்கிலாந்தின் கரமே ஓங்கி உள்ளது'' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Image copyright Getty Images

இந்த தொடரில் இந்திய அணியின் தோல்வி மற்றும் பங்களிப்பு குறித்து பிபிசி தமிழிடம் மூத்த பத்திரிகையாளரான விஜய் லோக்பாலி உரையாடினார்.

''நாசிர் ஹுசைன் கூறிய கருத்து தற்போதைய நிலையில் பொருத்தமாகவே உள்ளது. இந்திய அணி அதன் திறமைக்கேற்ப இந்த தொடரில் விளையாடவில்லை. ஆனால், அடுத்து வரும் டெஸ்டில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரின் போக்கு மாறக்கூடும்'' என்று விஜய் லோக்பாலி கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், ''இந்த தொடரில் இந்திய அணி பல தருணங்களில் மோசமாகத்தான் விளையாடியுள்ளது. ஆனால், முதல் டெஸ்ட் போட்டி எந்த அணிக்கும் சாதகமாக ஆகியிருக்கலாம். இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் இந்தியா பேட்டிங் செய்தபோது மிகவும் கடுமையான சூழலில் அந்த அணி பேட்டிங் செய்ய வேண்டியிருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்'' என்று தெரிவித்தார்.

''அதே வேளையில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியையும் நாம் பாராட்டிட வேண்டும்'' என்று அவர் கூறினார்.

Image copyright ALLSPORTS / GETTYIMAGES

இந்திய அணியின் தேர்வு குறித்து அவர் கருத்து கூறுகையில், ''களத்தில் விளையாடிய 11 பேர் கொண்ட அணித்தேர்வில் தவறு நிகழ்ந்துள்ளதை இந்திய அணியின் நிர்வாகம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. ரஹானே, முரளி விஜய் போன்றோர் தற்போது ஃபார்மில் இல்லை'' என்று குறிப்பிட்டார்.

'' கே.எல். ராகுல் போன்றோருக்கு இதுதான் முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம். அதனால் இந்த இளம் அணி நன்கு விளையாட இன்னும் கொஞ்சம் காலம் அளிக்கலாம். வரும் போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்'' என்று விஜய் லோக்பாலி கூறினார்.

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் பேட்டிங் ஏன் தொடர்ந்து தடுமாறுகிறது என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கிரிக்கெட் வீரர் சக்தி, ''முன்பு விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியில் சேவாக், ராகுல் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் மற்றும் கங்குலி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த ஐவரும் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினர். இவர்களின் மிக சிறந்த பேட்டிங் வெளிநாட்டு மண்ணில் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்தது'' என்று நினைவுகூர்ந்தார்.

Image copyright Getty Images

''ஆனால், தற்போதைய அணியில் கோலியை தவிர மற்ற வீரர்களுக்கு போதுமான அனுபவமும், நுட்பமும் இல்லை. முரளி விஜய் மற்றும் தவான் போன்றோர் தற்போது நல்ல ஃபார்மில் இல்லை'' என்று கூறினார்.

'பந்துவீச்சளர்கள் ஓகே, பேட்ஸ்மேன்கள் தான்.....'

இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து அவர் கூறுகையில், ''முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சளர்கள் மிக சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு கிட்டத்தட்ட அழைத்துச் சென்றனர். இந்த தொடரில் ஷமி, இசாந்த் சர்மா போன்றோர் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். அஸ்வின் மற்றும் பாண்ட்யா போன்றோரும் அவ்வப்போது நன்கு பங்களித்துள்ளனர்'' என்றார்.

''இந்த நிலையில், அணி வெற்றி பெறுவது பேட்ஸ்மேன்களின் கையில்தான் இனி உள்ளது'' என்று சக்தி குறிப்பிட்டார்.

இந்திய அணி இந்த சுற்றுப்பயணத்தில் அதன் திறமை மற்றும் அனுபவத்துக்குகேற்ப விளையாடவில்லை என்ற போதிலும்,இனிவரும் போட்டிகளில் இந்திய அணி வெல்லும்பட்சத்தில் தொடரின் போக்கு மாறக்கூடும் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Image copyright ALLSPORTS / GETTY IMAGES

இதனிடையே இந்த தோல்விக்கு காரணமாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை குற்றம் சாட்டி சமூகவலைத்தளங்களில் கருத்து வெளியிட்ட ரசிகர்கள் சாஸ்திரிக்கு பதில் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி 20 போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டி 20 போட்டி தொடரை இந்தியாவும், ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்தும் முறையே 2-0 என்று வென்றன.

இந்நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று இவ்விரு அணிகளுக்கும் இடையே தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :