சினிமா விமர்சனம்: காற்று வெளியிடை

நடிகர்கள் கார்த்தி, அதிதி ராவ், தில்லி கணேஷ், ஆர்.ஜே. பாலாஜி, ருக்மிணி
இசை ஏ.ஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு ரவிவர்மன்
இயக்கம் மணிரத்னம்

மணிரத்னத்தின் முந்தைய படமான ஓ.கே. காதல் கண்மணியைப் போல இதுவும் காதல்தான் கதை.

நாயன் வருண் (கார்த்தி) இந்திய விமானப் படையின் விமானி. ஸ்ரீ நகரில் பணியாற்றும் அவர், அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியவரும் லீலாவை (அதிதி ராவ்) காதலிக்கிறார். ஆணாதிக்கப் போக்குடன் செயல்படுவதால் இருவருக்கும் சண்டைவர, பிரிகிறார்கள். இதற்கிடையில் பாகிஸ்தானுடனான மோதலில் வருணின் விமானம் வீழ்ந்துவிட, அந்நாட்டுச் சிறையில் அடைபடும் அவர், அங்கிருந்து தப்பி எப்படி காதலியுடன் இணைகிறார் என்பதே கதை.

மணிரத்னம் தன் படத்தில் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களைப் பயன்படுத்துபவர். இந்தப் படத்திலும் ஏ.ஆர். ரஹ்மான், ரவிவர்மன், ஸ்ரீஹர் பிரசாத் (படத் தொகுப்பு) என சிறந்த கலைஞர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இதில் ரவிவர்மனில் ஒளிப்பதிவு துலக்கமாகத் தெரிகிறது. படத்தின் பல காட்சிகள் நெஞ்சை அள்ளுகின்றன. வான் வருவான், நல்லை அல்லை போன்ற சில பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கத்தக்கவை. கார்த்தி, அதிதி ராவ் ஆகியோரின் நடிப்பில் குறைசொல்ல ஏதுமில்லை.

இத்தனை இருந்தும் படம் மனதில் ஒட்ட மறுக்கிறது. விமானம் விபத்திற்குள்ளாகி பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொள்ளும் நாயகனின் நினைவுகளாக படம் துவங்குகிறது. தான் லீலாவைச் சந்தித்ததையும் காதல் கொண்டதையும் நினைத்துப் பார்க்க ஆரம்பிக்கிறார் நாயகன். மணிரத்னத்தின் எல்லாப் படங்களைப் போலவே, இந்தப் படத்திலும் நாயகன் காதலைச் சொல்கிறார். அவரது எல்லாப் படங்களைப் போலவும் நாயகி காதலை ஏற்கிறார். அவரது பல படங்களில் பார்த்துவிட்டதால என்னவோ, இயல்பு வாழ்க்கைக்கு சற்றும் தொடர்பில்லாத இந்தக் காட்சிகள் மிகவும் சலிப்பூட்டுகின்றன.

படம் முழுக்க வருண், லீலாவிடம் மோசமாகவே நடந்துகொள்கிறார். வருத்தப்படும் நாயகி, வருண் 'ஸாரி' சொன்னதும் ஏற்றுக்கொள்கிறார். வயிற்றில் வளரும் குழந்தை வேண்டாம் என்று சொல்லும், தன் பெற்றோரை அவமானப்படுத்தும் வருணை, திருந்தினாரா இல்லையா என்று தெரியாமலேயே முடிவில் ஏற்கிறார் நாயகி.

வருண் லீலாவை அவமானப்படுத்தும் காட்சிகளைத் தவிர, எந்தக் காட்சிகளும் மனதில் ஒட்டவில்லை. பாகிஸ்தான் சிறைகளிலிருந்து தப்பும் காட்சிகள் ரொம்பவுமே அமெச்சூரானவை. சிறைச் சுவரில் ஒரு ஓட்டை. அவ்வளவுதான் வெளியில்வந்துவிடுகிறார்கள். அதேபோல, தப்பிச் செல்லும் நாயகனை பாகிஸ்தான் காவல்துறையினர் துரத்தி துரத்தி எந்திரத் துப்பாக்கியால் சுட, ஒரு குண்டுகூட மேலே படாமல், வழியில் உள்ள பாகிஸ்தான் கொடியை வீழ்த்திவிட்டு, ஆப்கானிஸ்தானுக்குள் நுழைகிறார் நாயகன்.

தான் மட்டுமே முக்கியம், தன் விருப்பங்கள் மட்டுமே முக்கியம் எனக் கருதும் நாயகன், சுயமரியாதையை விரும்பும் நாயகி என்ற முரண்பாட்டை மையமாக வைத்து படத்தை உருவாக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். சில காட்சிகளில் சில பாத்திரங்கள் அதைப் பேசவும் செய்கிறார்கள். ஆனால், முடிவில் கிடைப்பதென்னவோ, தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தும் நாயகனை ஏற்றுக்கொள்ளும் நாயகி என்ற கதைதான். அதுவும், மிக மிக சலிப்பூட்டும் வடிவில்.

இதையும் படிக்கலாம்:

திரைப்பட விமர்சனம்: கவண்

சினிமா விமர்சனம்: டோரா

ராஜூமுருகனின் ஜோக்கர் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்